ஒக்டோபர் 1 ஆம் திகதி முதல் நடைமுறைக்கு வரவுள்ள டிஜிட்டல் கையொப்பம் மற்றும் காகிதமில்லா சுங்கப் பிரகடன முறைமையை (Digital Signature and Paperless Customs Declaration System) வெற்றிகரமாக நடைமுறைப்படுத்துவதற்கு இலங்கை சுங்கத் திணைக்களத்தின் தகவல் தொழில்நுட்பப் பிரிவு வழங்கிய பங்களிப்பை, வருமான நிர்வாக சீர்திருத்த மற்றும் நவீனமயமாக்கல் பணியகத்தின் தலைவரும், ஜனாதிபதியின் சிரேஷ்ட மேலதிக செயலாளருமான சீவலி அருகொட பாராட்டினார்.
சிலோன் வர்த்தக சம்மேளனத்தினால் (Ceylon Chamber of Commerce) நேற்று (18) ஏற்பாடு செய்யப்பட்டிருந்த விழிப்புணர்வு நிகழ்ச்சியில், அரசாங்கத்தின் டிஜிட்டல் மயமாக்கல் கொள்கை மற்றும் வருமான நிர்வாக சீர்திருத்த மற்றும் நவீனமயமாக்கல் பணியகத்தின் பங்கு தொடர்பில் விசேட உரையாற்றும் போதே அவர் இந்தக் கருத்துக்களை வெளியிட்டார்.
சிலோன் வர்த்தக சம்மேளன கேட்போர் கூடத்தில் நடைபெற்ற இந்த விழிப்புணர்வு நிகழ்ச்சியானது, புதிய டிஜிட்டல் கையொப்பம் மற்றும் காகிதமில்லா சுங்கப் பிரகடன முறைமை குறித்து இறக்குமதியாளர்கள் மற்றும் வர்த்தக சமூகத்தினருக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தும் நோக்கில் அமைந்திருந்தது.
சுங்கத் திணைக்களத்தில் காகிதமில்லா ஆவணச் செயலாக்கத்தை துரிதப்படுத்துவதற்கான அரசாங்கத்தின் முன்முயற்சிக்கு அமைவாக இந்த நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டிருந்ததுடன், இந்த முறைமையின் ஊடாக வர்த்தகத் துறைக்கு கிடைக்கும் நன்மைகள் குறித்தும் இங்கு விரிவாகக் கலந்துரையாடப்பட்டது.
LankaPay மற்றும் இலங்கை சுங்கத் திணைக்கள அதிகாரிகளினால் ஒரு தொழில்நுட்ப அமர்வு நடாத்தப்பட்டது. இதில் டிஜிட்டல் கையொப்பங்கள், டிஜிட்டல் கையொப்பத்தைப் பெறுவதற்கான நடைமுறை மற்றும் சுங்கப் பிரகடனங்களைச் சமர்ப்பிக்கும் போது அதன் நடைமுறைப் பயன்பாடு குறித்த விரிவான தகவல்கள் பங்கேற்பாளர்களுக்கு வழங்கப்பட்டன.
சுங்கப் பணிப்பாளர்களான ருவன் திசேரா மற்றும் சிசிர குமார, வருமான நிர்வாக சீர்திருத்த மற்றும் நவீனமயமாக்கல் பணியகத்தின் பணிப்பாளர்களான டபிள்யூ. எல். சி. திலகசிறி மற்றும் எம். ஏ. பிரேமலால், சிலோன் வர்த்தக சம்மேளனத்தின் பிரதம நிறைவேற்று அதிகாரியும் பொதுச் செயலாளருமான ஷிரான் பெர்னாண்டோ, இலங்கை சுங்கத் திணைக்களம் மற்றும் அதன் தகவல் தொழில்நுட்பப் பிரிவின் சிரேஷ்ட அதிகாரிகள், LankaPay பிரதிநிதிகள் மற்றும் பெருமளவிலான இறக்குமதியாளர்கள் மற்றும் வர்த்தக சமூகப் பிரதிநிதிகள் இந்த நிகழ்வில் கலந்துகொண்டனர்.
