சீரற்ற வானிலை காரணமாக தற்காலிகமாக மூடப்பட்டிருந்த கண்டி மற்றும் நுவரெலியா மாவட்டங்களில் உள்ள அரச பாடசாலைகள், ஹட்டன் கல்வி வலயம் நீங்கலாக, இன்று (05) மீண்டும் திறக்கப்படுகின்றன.
கடும் மழை மற்றும் வானிலை சார்ந்த அனர்த்த அபாயங்கள் காரணமாக, முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக இரு மாவட்டங்களிலும் உள்ள பாடசாலைகளை மூடுவதற்கு மத்திய மாகாண கல்வித் திணைக்களம் உத்தரவிட்டிருந்தது.
இதற்கிடையில், நிலவும் சீரற்ற வானிலையால் ஒன்பது மாவட்டங்களில் 3,014 குடும்பங்களைச் சேர்ந்த 11,832 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ நிலையம் (DMC) தெரிவித்துள்ளது.
வானிலை தொடர்பான அனர்த்தங்களால் எட்டு மரணங்கள் பதிவாகியுள்ளன. அதே நேரத்தில் ஒரு வீடு முழுமையாகவும், மேலும் 290 வீடுகள் பகுதியளவிலும் சேதமடைந்துள்ளன.
அனர்த்த முகாமைத்துவ நிலையத்தின் அண்மைக்கால நிலைவர அறிக்கையின்படி, இடம்பெயர்ந்த 3,538 பேர் தற்போது 51 தற்காலிக பாதுகாப்பு மையங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
