ஈரானில் மறைந்த உச்ச தலைவர் அயேதுல்லா அலி கமேனியின் அரச இறுதிச் சடங்குகள் தலைநகர் தெஹ்ரானில் நடைபெற்று வருகின்றன. கடந்த பெப்ரவரி மாதம் அமெரிக்காவின் தாக்குதலில் கமேனி கொல்லப்பட்டதைத் தொடர்ந்து, இரு நாடுகளுக்கும் இடையே பதற்றம் நிலவி வந்தது. தற்போது முதற்கட்ட போர் நிறுத்தம் அறிவிக்கப்பட்டு, அமைதிப் பேச்சுவார்த்தைகள் ஆரம்பமாகியுள்ள சூழலில், சுமார் 4 மாதங்களுக்குப் பிறகு இந்த இறுதி ஊர்வலம் நடைபெறுகிறது.
ஆயிரக்கணக்கான பொதுமக்கள் மற்றும் ஈரானின் உயர்மட்ட அரசியல் தலைவர்கள் தெஹ்ரானில் திரண்டு அஞ்சலி செலுத்தி வருகின்றனர். கமேனியின் மூன்று மகன்களும் இந்த நிகழ்வில் பங்கேற்றனர். அதேவேளை, புதிய உச்ச தலைவராக நியமிக்கப்பட்டுள்ள மொஜ்தபா கமேனி இன்னும் பொதுவெளியில் தோன்றவில்லை.
டிரம்பின் சர்ச்சைக்குரிய கருத்து:
இந்த இறுதிச் சடங்கு நிகழ்வுகள் குறித்து கருத்துத் தெரிவித்த அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப், பல ஈரானிய தலைவர்கள் ஒரே இடத்தில் கூடியிருப்பதைச் சுட்டிக்காட்டி சர்ச்சைக்குரிய கருத்தொன்றை முன்வைத்தார். “ஈரான் தலைவர்கள் அனைவரும் கமேனியின் இறுதிச் சடங்கில் பங்கேற்று இருக்கிறார்கள்.. ஒரே ஒரு தாக்குதலில் அனைவரையும் வீழ்த்திவிடலாம்” எனக் குறிப்பிட்ட அவர், அவ்வாறு செய்தால் பின்னர் பேச்சுவார்த்தை நடத்துவதற்கு யாரும் இருக்க மாட்டார்கள் என்பதால் அமெரிக்கா அதனைத் தவிர்ப்பதாகக் கூறினார்.
மேலும், ஈரான் அமைதி உடன்படிக்கையை மேற்கொள்ள விரும்புவதாகவும், கமேனியின் இறுதிச் சடங்குகள் முடியும் வரை பேச்சுவார்த்தைகளில் சிறிய இடைவெளி விடப்பட்டுள்ளதாகவும் தெரிவித்த டிரம்ப், இந்த இடைப்பட்ட காலத்தில் எந்தவித தாக்குதல்களும் நடத்தப்படாது என்றும் உறுதியளித்தார்.
ஈரானின் கண்டனம்:
டிரம்பின் இந்த கருத்திற்கு ஈரான் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. அமெரிக்காவின் இந்த நிலைப்பாட்டை விமர்சித்து ஈரான் விடுத்துள்ள பதிலடியில், “மக்களைக் கொல்ல முடியும், ஆனால் ஒரு சித்தாந்தத்தை வீழ்த்த முடியாது. ஒரு வாசனைத் திரவிய போத்தலை உடைத்தால், அதன் நறுமணம் எங்கும் பரவுவது போன்றது இது” எனக் குறிப்பிட்டுள்ளது. மேலும், அமெரிக்க நிர்வாகத்தின் இத்தகைய போக்கு அவர்களின் புரிதலற்ற தன்மையையே காட்டுவதாக ஈரான் விமர்சித்துள்ளது.
கமேனியின் இறுதி ஊர்வலங்கள் ஜூலை 9 ஆம் தேதி வரை ஈரானின் பல்வேறு நகரங்களில் நடைபெறவுள்ளன. இந்தச் சூழலில் இரு நாட்டுத் தலைவர்களுக்கும் இடையேயான இந்த வார்த்தைப் போர், ஏற்கனவே நிலவி வரும் ராஜதந்திர பதற்றத்தை மேலும் அதிகரித்துள்ளது.
