காலநிலை தாங்கும் திறன் மற்றும் பாலின சமத்துவத்தை மேம்படுத்தும் நோக்கில் ஜப்பான் அரசாங்கம் இலங்கைக்கு 2.6 மில்லியன் அமெரிக்க டொலர் நிதியுதவியை வழங்கியுள்ளது. இந்தச் செயற்றிட்டங்கள் ஐக்கிய நாடுகளின் அபிவிருத்தி திட்டம் (UNDP) மற்றும் இலங்கை அரசாங்கம் ஆகியவற்றுடன் இணைந்து முன்னெடுக்கப்படவுள்ளன.
இந்த நிதியுதவியின் மூலம் இரண்டு முக்கிய திட்டங்கள் நடைமுறைப்படுத்தப்படவுள்ளன. முதலாவதாக, 1.5 மில்லியன் டொலர் நிதியீட்டில் கிளிநொச்சி மற்றும் நுவரெலியா மாவட்டங்களில் ‘காலநிலைக்கு ஏற்ற பால் பண்ணை’ (Climate-Smart Dairy) திட்டம் முன்னெடுக்கப்படவுள்ளது. இதன் மூலம் 750 சிறு விவசாயிகளும், மறைமுகமாக 5,000 க்கும் மேற்பட்ட சமூகத்தினரும் பயனடைவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
இரண்டாவதாக, 1.16 மில்லியன் டொலர் நிதியீட்டில் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில், குறிப்பாக கிளிநொச்சி மற்றும் முல்லைத்தீவு மாவட்டங்களில் கண்ணிவெடி அகற்றும் பணிகளில் ஈடுபடும் பெண்களின் திறனை மேம்படுத்தும் செயற்றிட்டம் முன்னெடுக்கப்படவுள்ளது.
இந்தத் திட்டங்கள், பாதிக்கப்பட்ட சமூகங்களின் நிலையான வாழ்வாதாரத்தை மீளக்கட்டியெழுப்பவும், இலங்கையின் நிகர-பூஜ்ஜிய (net-zero) வளர்ச்சி இலக்குகளை அடையவும் பெரும் பங்களிப்பை வழங்கும் என UNDP தனது அறிக்கையில் தெரிவித்துள்ளது.
