இந்த சமாதான நடைபயணம் காலை 6:30 மணிக்கு ஆரம்பமாகத் திட்டமிடப்பட்டுள்ளதுடன், ஏப்ரல் 28 ஆம் திகதி வரை இந்நிகழ்வைத் தொடர்ந்து நடத்துவதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
ஜய ஸ்ரீ மஹா போதியிலிருந்து கொண்டுவரப்பட்ட புனித போதிக் கன்றை ஏந்திச் செல்லும் இந்த ஆன்மீக ஊர்வலம், ஒற்றுமை, கருணை மற்றும் நல்லிணக்கத்தை ஊக்குவிக்கும் வகையில் முக்கிய நகரங்கள் ஊடாக பயணிக்கவுள்ளது.
முன்னதாக, அமெரிக்காவில் டெக்சாஸிலிருந்து வாஷிங்டன் வரை 10 மாநிலங்களைக் கடந்து, 200க்கும் மேற்பட்ட பௌத்த துறவிகள் 110 நாட்கள் சமாதான நடைபயணத்தை மேற்கொண்டனர். இது அவர்களின் நோக்கத்திற்கு சர்வதேச கவனத்தை ஈர்த்தது.
“எஹிபஸ்ஸிகோ சமாதான நடைபயணம்” (Ehipassiko Walk for Peace) என்று தலைப்பிடப்பட்ட இந்த முயற்சி, இப்போது அரசின் அனுசரணையுடன் ஏப்ரல் 28 வரை இலங்கையில் நடைபெற ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இதற்கமைய, இந்நிகழ்வில் கலந்துகொள்வதற்காக வியட்நாமின் வணக்கத்திற்குரிய பன்னாகர தேரர் தலைமையிலான துறவிகள் குழுவினர் நேற்று இலங்கை வந்தடைந்தனர். “ஆலோகா” (Aloka) என்ற பெயருடைய நாயும் துறவிகளுடன் இணைந்து பயணிக்கிறது.
ஆரம்ப நாளன்று (இன்று), நடைபயணம் தம்புள்ளையிலிருந்து மாத்தளை வரை நடைபெறும். பின்னர் நாளை கண்டிக்குச் செல்லும். வியாழக்கிழமை, கண்டியில் உள்ள ஸ்ரீ தலதா மாளிகையிலிருந்து நடைபயணம் மீண்டும் ஆரம்பமாகும்.
அதன் பின்னர் நடைபயணம் கேகாலை, யக்கல மற்றும் மஹர வழியாகச் சென்று, ஏப்ரல் 27 ஆம் திகதி களனி ரஜமஹா விகாரையை சென்றடையும். நிறைவு நாளான ஏப்ரல் 28 ஆம் திகதி களனியில் பொதுக் கூட்டமும், அதனைத் தொடர்ந்து சுதந்திர சதுக்கத்தில் ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்கவின் தலைமையில் விழாவும் நடைபெறும்.
வருகை தந்துள்ள துறவிகள் மே 1 ஆம் திகதி வரை நாட்டில் தங்கியிருக்கத் திட்டமிடப்பட்டுள்ளது. அதன் பின்னர் புனித தாதுக்கள் மற்றும் போதிக் கன்று ஆகியவை அமெரிக்காவிற்கு எடுத்துச் செல்லப்படும்.
