Headlines

சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்ட 89 குற்றவாளிகளை நாட்டுக்குக் கொண்டுவர நடவடிக்கை – பொலிஸார் அதிரடி!

இலங்கையில் பல்வேறு குற்றச் செயல்களில் ஈடுபட்டுவிட்டு, தற்போது வெளிநாடுகளில் தலைமறைவாக உள்ள மற்றும் சிவப்பு எச்சரிக்கை (Red Notices) விடுக்கப்பட்டுள்ள 89 குற்றவாளிகளை நாட்டுக்குக் கொண்டுவர பொலிஸார் தயாராகி வருவதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர், உதவி பொலிஸ் அத்தியட்சகர் (ASP) எப். யூ. வூட்லர் தெரிவித்துள்ளார்.

ஐக்கிய அரபு இராச்சியத்தில் (UAE) தலைமறைவாக இருந்த எட்டு சந்தேகநபர்கள் நேற்றிரவு (27) இலங்கைக்கு அழைத்து வரப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.

இது குறித்து மேலும் கருத்துத் தெரிவித்த அவர், “கடந்த மே 22 ஆம் திகதி, 19 ஆண்கள் மற்றும் இரண்டு பெண்கள் உட்பட மொத்தம் 21 சந்தேகநபர்கள் ஐக்கிய அரபு இராச்சியத்திலிருந்து நாட்டுக்கு அழைத்து வரப்பட்டனர். அவர்களிடம் விசேட பிரிவினர் தற்போது விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர். அத்துடன், நேற்றிரவு மேலும் 8 சந்தேகநபர்களை நாம் அங்குள்ள டுபாய் மற்றும் ஷார்ஜா ஆகிய நகரங்களில் இருந்து புலனாய்வு நடவடிக்கையின் மூலம் கைது செய்து இலங்கைக்குக் கொண்டு வந்துள்ளோம்.

இவர்களில் மூவர் வெளிநாடுகளில் இருந்தவாறு இலங்கையில் குற்றச் செயல்களை முன்னெடுக்கும் பாதாள உலகக் குழுக்களுடன் தொடர்புடையவர்கள். மேலும் இருவர் பாரியளவிலான போதைப்பொருள் கடத்தலுடனும், ஏனைய மூவர் வேறு பல குற்றங்களுடனும் தொடர்புடையவர்கள்” என்றார்.

மேலும், “இந்நாட்டில் குற்றங்களைப் புரிந்துவிட்டு வேறு நாடுகளுக்குத் தப்பிச் சென்று, சட்டத்தின் பிடியில் இருந்து நழுவி தலைமறைவாக குற்றச் செயல்களில் ஈடுபட எவரையும் நாம் அனுமதிக்க மாட்டோம் என்பதை மீண்டும் வலியுறுத்துகிறோம். 2024, 2025 மற்றும் 2026 ஆகிய ஆண்டுகளில், நாம் ஏற்கனவே சிவப்பு எச்சரிக்கைகள் மூலம் 32 சந்தேகநபர்களையும், ஏனைய 70 சந்தேகநபர்களையும் நாட்டுக்கு அழைத்து வந்துள்ளோம்.

தற்போது மேலும் 89 சிவப்பு எச்சரிக்கைகள் மீது நடவடிக்கை எடுக்க நாம் முழுமையாகத் தயாராக உள்ளோம் என்பதோடு, அந்த 89 சந்தேகநபர்களையும் விரைவில் நாட்டுக்குக் கொண்டு வருவோம்” என அவர் மேலும் தெரிவித்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *