முன்னாள் அரச புலனாய்வுப் பிரிவின் (SIS) பணிப்பாளர், ஓய்வுபெற்ற மேஜர் ஜெனரல் சுரேஷ் சல்லே, கொழும்பு தேசிய வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வரும் நிலையில், அவரை தினசரி பார்வையிட குற்றப்புலனாய்வு திணைக்களத்திடம் (CID) அவரது மனைவியும் சட்டத்தரணியும் அனுமதி கோரியுள்ளனர்.
நீதிமன்றம் இத்தகைய அனுமதியை வழங்க மறுத்ததைத் தொடர்ந்து, சிஐடி பணிப்பாளருக்கு தனித்தனியாக கடிதங்கள் மூலம் இந்த கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டுள்ளன. உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் தொடர்பான விசாரணைகளுக்காக தடுப்புக்காவல் உத்தரவின் கீழ் வைக்கப்பட்டுள்ள சுரேஷ் சல்லே, தற்போது சிஐடி காவலில் இருக்கும் அதேவேளை மருத்துவ சிகிச்சையும் பெற்று வருகிறார்.
நேற்று (10) கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றத்தில் இந்த வழக்கு விசாரணைக்கு வந்தபோது, வைத்தியசாலையின் பார்வையாளர் நேரத்தில் அவரது மனைவியும் மகனும் அவரை தினசரி பார்வையிட அனுமதி வழங்குமாறு சுரேஷ் சல்லே சார்பாக ஆஜரான சட்டத்தரணிகள் கோரிக்கை விடுத்தனர். எனினும், சந்தேகநபர் பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் (PTA) விதிகளின் கீழ் தடுத்து வைக்கப்பட்டுள்ளதால், அவ்வாறான உத்தரவைப் பிறப்பிக்க தமக்கு அதிகாரம் இல்லை என கொழும்பு கோட்டை நீதவான் பசன் அமரசேகர தீர்ப்பளித்தார்.
நீதிமன்றத்தின் இந்த தீர்மானத்தையடுத்து, முன்னாள் அரச புலனாய்வுப் பிரிவின் பணிப்பாளரின் மனைவி, தினசரி பார்வையிட அனுமதி கோரி சிஐடி பணிப்பாளரிடம் நேரடியாக மேல்முறையீடு செய்துள்ளார். அவரது சட்டத்தரணி அசித் சிறிவர்தனவும் தனி கோரிக்கை ஒன்றை சமர்ப்பித்துள்ளார். தனது சேவை பெறுநரின் நிலையைக் கண்காணிப்பதும், அவரது உரிமைகள் மற்றும் நலன்களைப் பாதுகாப்பதும், இது தொடர்பான முன்னேற்றங்களை நீதிமன்றத்திற்குத் தெரியப்படுத்துவதும் தனது தொழில்முறைப் பொறுப்பு என அவர் அதில் குறிப்பிட்டுள்ளார்.
சுரேஷ் சல்லே உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படும் நிலையில், அவருடனான தொடர்ச்சியான தொடர்பு அவசியம் எனவும் சட்டத்தரணி சிறிவர்தன மேலும் தெரிவித்துள்ளார்.
இதற்கிடையில், கட்டுவாப்பிட்டி புனித செபஸ்டியன் தேவாலயத்தின் மீது நடத்தப்பட்ட பயங்கரவாதத் தாக்குதலில் பாதிக்கப்பட்டவர்கள், உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் தொடர்பில் பாரபட்சமற்ற விசாரணை நடத்தப்பட வேண்டும் எனவும், தற்போதைய விசாரணைகளில் அதிகாரிகள் தலையிடக் கூடாது எனவும் வலியுறுத்தி நீர்கொழும்பு-கொழும்பு பிரதான வீதியில் உள்ள பல்திய சந்திக்கருகில் இன்று (11) அமைதிப் போராட்டம் ஒன்றில் ஈடுபட்டனர்.
