“சட்டத்தின் ஆட்சியை உறுதிப்படுத்துவோம்” என்ற தலைப்பில் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்கள் குழு ஒன்று ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்கவுக்கு கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளது.
அரசு புலனாய்வுச் சேவையின் (SIS) முன்னாள் பிரதானி, மேஜர் ஜெனரல் (ஓய்வுபெற்ற) சுரேஷ் சல்லே தற்போது பொலிஸ் காவலில் உள்ளார். அவர் காவலில் துஷ்பிரயோகம் செய்யப்படுவதாகக் கூறப்படும் குற்றச்சாட்டுகள் குறித்து எழுந்துள்ள பொது விவாதத்தின் பின்னணியில் இக்கடிதம் ஜனாதிபதிக்கு அனுப்பப்பட்டுள்ளது.
காவலில் உள்ளவர்கள் கொல்லப்படுவது உள்ளிட்ட வன்முறை நிறைந்த கடந்த காலச் சம்பவங்கள், ஒரு ஜனநாயக நாட்டில் மீண்டும் நிகழக்கூடாது என்ற பலமான கருத்து நிலவுவதாக கடிதத்தில் கையொப்பமிட்டவர்கள் தெரிவித்துள்ளனர். குறிப்பாக, ஜனதா விமுக்தி பெரமுனவின் (JVP) ஸ்தாபகர் ரோஹண விஜேவீர காவலில் இருந்தபோது படுகொலை செய்யப்பட்டமை மற்றும் அதன் பின்னர் அவரது உடலை கையாண்ட விதம் போன்றவை மீண்டும் நிகழக்கூடாது என அவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.
எனவே, அனைத்து உண்மைகளையும் சமச்சீரான முறையில் மீளாய்வு செய்யுமாறும், சட்டத்தின் முன் அனைவரும் சமம் என்ற கொள்கையின் அடிப்படையில், முன்னாள் புலனாய்வுப் பிரதானியை ஒரு சாதாரண சந்தேகநபராக நடத்துவதை உறுதி செய்யுமாறும் இக்கடிதம் ஜனாதிபதியிடம் வலியுறுத்தியுள்ளது.
இந்த கடிதத்தில் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்களான டலஸ் அழகப்பெரும, சட்டத்தரணி டிலான் பெரேரா, டி.பி. ஹேரத், கலாநிதி குணபால ரத்னசேகர, கரு கொடித்துவக்கு, கலாநிதி திலக் ராஜபக்ஷ, கலாநிதி உபுல் கலப்பதி, லலித் எல்லாவல மற்றும் கே.பி.எஸ். குமாரசிறி ஆகியோர் கையொப்பமிட்டு சமர்ப்பித்துள்ளனர்.
