முன்னாள் அரச புலனாய்வுத் துறையின் (SIS) பணிப்பாளர் மேஜர் ஜெனரல் (ஓய்வுபெற்ற) சுரேஷ் சாலேயின் உடல்நிலை மோசமடைந்து வருவது குறித்து, மனிதாபிமான அடிப்படையில் ஜனாதிபதி அவசரமாக தலையிட வேண்டும் என குளோபல் ஸ்ரீலங்கன் போரம் (Global Sri Lankan Forum) கோரிக்கை விடுத்துள்ளது.
ஜனாதிபதி அனுர குமார திஸாநாயக்கவுக்கு அனுப்பியுள்ள கடிதத்தில், மேஜர் ஜெனரல் சுரேஷ் சாலே தொடர்பான விசாரணைகளை நீண்டகால நிர்வாகத் தடுப்புக்காவலுக்குப் பதிலாக, வெளிப்படையான நீதித்துறை நடவடிக்கைகள் மூலம் துரிதப்படுத்துமாறு அந்த அமைப்பு கேட்டுக்கொண்டுள்ளது.
சாலேயின் தொடர்ச்சியான தடுப்புக்காவல் மற்றும் மோசமடைந்து வரும் உடல்நிலை குறித்து ஜனாதிபதி உடனடி கவனம் செலுத்த வேண்டும் என்றும், மனிதாபிமான தலையீட்டை மேற்கொள்ள வேண்டும் என்றும் போரம் வலியுறுத்தியுள்ளது.
இலங்கையின் இறையாண்மை மற்றும் தேசிய பாதுகாப்பைப் பாதுகாப்பதற்காக சாலே ஒரு சிரேஷ்ட இராணுவ அதிகாரியாக தனது வாழ்க்கையின் பல தசாப்தங்களை அர்ப்பணித்துள்ளார் என்பதைக் குறிப்பிட்ட அந்த அமைப்பு, எந்தவொரு தனிநபரையும் முறையான குற்றப்பத்திரிகை இல்லாமல் நீண்டகால தடுப்புக்காவலுக்கு உட்படுத்தக்கூடாது என்று வலியுறுத்தியுள்ளது.
பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தின் (PTA) கீழ் தடுப்புக்காவலில் இருக்கும் போது மேஜர் ஜெனரல் சுரேஷ் சாலேக்கு ஏதேனும் துரதிர்ஷ்டவசமான சம்பவம் நிகழ்ந்தால், தடுப்புக்காவல் உத்தரவை பிறப்பித்த ஜனாதிபதி அலுவலகம் உள்ளிட்ட அதிகாரிகளே அதற்குப் பொறுப்பேற்க வேண்டும் என்று கடிதத்தில் கூறப்பட்டுள்ளது.
சாலேவுக்கு உயர்தர மருத்துவ வசதிகள் தடங்கலின்றி கிடைப்பதையும் அவரது பாதுகாப்பு கண்டிப்பாக உறுதிப்படுத்தப்படுவதையும் ஜனாதிபதி உறுதி செய்ய வேண்டும் என குளோபல் ஸ்ரீலங்கன் போரம் மேலும் கேட்டுக்கொண்டுள்ளது.
பாதிக்கப்பட்டவர்களுக்கு நீண்டகாலமாக எதிர்பார்க்கப்படும் நீதியைப் பெற்றுக்கொடுப்பதற்காக 2019 ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல்கள் தொடர்பான விரிவான, வெளிப்படையான மற்றும் நியாயமான விசாரணைகளை முன்னெடுப்பதற்கான தற்போதைய அரசாங்கத்தின் ஆணையை தாம் முழுமையாக ஆதரிப்பதாகக் குறிப்பிட்டுள்ள போரம், நீதியை அடைவதற்குப் பயன்படுத்தப்படும் வழிமுறைகள் சட்டத்தின் ஆட்சியின் மிக உயர்ந்த தரங்களைப் பிரதிபலிக்க வேண்டும் என்று தாம் உறுதியாக நம்புவதாகவும் தெரிவித்துள்ளது.
எனவே, உலகளாவிய இலங்கை புலம்பெயர்ந்தோர் சார்பாக, மேஜர் ஜெனரல் சாலேவுக்கு உயர்தர மருத்துவ சிகிச்சைகள் கிடைப்பதையும், அவரது பாதுகாப்பு உறுதி செய்யப்படுவதையும் உறுதிப்படுத்துமாறும், நீண்ட நிர்வாகத் தடுப்புக்காவலுக்குப் பதிலாக அவரது சட்டப்பூர்வ வழக்கை வெளிப்படையான நீதித்துறை வழிகள் மூலம் துரிதப்படுத்துமாறும் ஜனாதிபதி மற்றும் அரசாங்கத்திடம் குளோபல் ஸ்ரீலங்கன் போரம் கோரிக்கை விடுத்துள்ளது.
ஈஸ்டர் ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல்கள் தொடர்பாக விசாரிக்கப்பட்டு வரும் முன்னாள் அரச புலனாய்வுத் துறை பணிப்பாளர் மேஜர் ஜெனரல் (ஓய்வுபெற்ற) சுரேஷ் சாலே, குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் (CID) காவலில் இருந்தபோது முன்னெடுத்த உண்ணாவிரதப் போராட்டத்தையடுத்து, கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
