டெல்லி ஜந்தர் மந்தர் பகுதியில் ‘கரப்பான்பூச்சி ஜனதா கட்சி’ சார்பில் கடந்த 25 நாட்களாகத் தொடர் போராட்டம் நடத்தப்பட்டு வருகிறது. இப்போராட்டம் காரணமாக, டெல்லியின் முக்கிய வர்த்தகப் பகுதியான கன்னாட் பிளேஸில் இன்று மாலை 6.30 மணிக்குள் அனைத்து கடைகள், உணவகங்கள் மற்றும் நிறுவனங்களை மூடுமாறு நியூடெல்லி வர்த்தகர்கள் சங்கம் அதன் உறுப்பினர்களுக்கு அவசர அறிவுறுத்தல் வழங்கியுள்ளது. விரும்பத்தகாத சம்பவங்களைத் தவிர்க்கவும், சொத்துக்களைப் பாதுகாக்கவும் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகச் சங்கம் தெரிவித்துள்ளது. இத்திடீர் அறிவிப்பால் டெல்லியில் பதற்றமான சூழல் உருவாகியுள்ளதுடன், இன்று இரவு ஏதேனும் அசம்பாவிதங்கள் நடைபெறுமோ என்ற அச்சமும் பரவியுள்ளது.
விரிவான செய்தி:
டெல்லி ஜந்தர் மந்தர் பகுதியில் நடைபெற்று வரும் ‘கரப்பான்பூச்சி ஜனதா கட்சி’யின் தொடர் போராட்டம் காரணமாக, தலைநகரின் முக்கிய வர்த்தக மையமான கன்னாட் பிளேஸ் (Connaught Place) பகுதியில் இன்று திடீர் பதற்றம் ஏற்பட்டுள்ளது. நியூடெல்லி வர்த்தகர்கள் சங்கம் (New Delhi Traders Association – NDTA) இன்று மாலை வெளியிட்ட ஒரு முக்கிய அறிவிப்பில், கன்னாட் பிளேஸ் பகுதியைச் சுற்றியுள்ள அலுவலகங்கள், உணவகங்கள் உள்ளிட்ட அனைத்து கடைகள் மற்றும் வணிக நிறுவனங்களையும் மாலை 6.30 மணிக்குள் மூடுமாறு அறிவுறுத்தியுள்ளது.
எந்தவொரு விரும்பத்தகாத சூழ்நிலையையும் தவிர்க்கவும், சொத்து சேதம் மற்றும் ஊழியர்கள், வாடிக்கையாளர்களுக்கு ஏற்படக்கூடிய பாதிப்புகளைத் தடுக்கவும் இந்த நடவடிக்கைக்கு நிறுவன உரிமையாளர்கள் கண்டிப்பாக ஒத்துழைக்க வேண்டும் என வர்த்தகர் சங்கம் வலியுறுத்தியுள்ளது.
இது தொடர்பாக நியூடெல்லி வர்த்தகர் சங்கத்தின் தலைவர் அதுல் பார்கவா கூறுகையில், “கன்னாட் பிளேஸ் பகுதியில் பல ஆயிரக்கணக்கான மக்கள் திரண்டு வருவதால், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாகவும், வாடிக்கையாளர்கள் மற்றும் ஊழியர்களின் பாதுகாப்பைக் கருத்தில் கொண்டும் கடைகளை மூடுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது” என்றார்.
ஜந்தர் மந்தர் பகுதி கன்னாட் பிளேஸுக்கு மிக அருகில் அமைந்துள்ளதால், கடந்த 25 நாட்களாகத் தொடர்ந்து வரும் போராட்டத்தின் ஒரு பகுதியாக இன்று இரவு ஏதேனும் அசம்பாவிதங்கள் நிகழ வாய்ப்புள்ளதோ என்ற கேள்விகள் எழுந்துள்ளன. இத்திடீர் அறிவிப்பு டெல்லி மக்களிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கெஜ்ரிவால் சந்தேகம்:
இதற்கிடையில், இந்த விவகாரம் குறித்து ஆம் ஆத்மி கட்சியின் தேசிய ஒருங்கிணைப்பாளர் அரவிந்த் கெஜ்ரிவால் தனது ‘எக்ஸ்’ பக்கத்தில் சந்தேகம் எழுப்பியுள்ளார். “கன்னாட் பிளேஸ் பகுதியில் பாதுகாப்பு காரணங்களுக்காக மாலை 6.30 மணிக்குள் அனைத்து கடைகளையும் மூட உத்தரவிடப்பட்டுள்ளது. மேலும், ஆம்புலன்ஸ்கள் குவிக்கப்பட்டுள்ளன. இதனால் மத்திய அரசு மீண்டும் ஜந்தர் மந்தரில் இன்று மாணவர்கள் மீது தடியடி நடத்தத் திட்டமிட்டுள்ளதா?” என்று அவர் கேள்வி எழுப்பியுள்ளார். கெஜ்ரிவாலின் இந்தக் கேள்வி டெல்லியில் நிலவும் பதற்றத்தை மேலும் அதிகரித்துள்ளது.
