மத்திய மாகாண ஆளுநர் பேராசிரியர் சரத் அபேகோன் தனது பதவி விலகல் கடிதத்தை ஜனாதிபதி அனுர குமார திஸாநாயக்கவிடம் சமர்ப்பித்துள்ளார்.
இது குறித்து அத தெரண வினவியபோது, சில நாட்களுக்கு முன்னர் ஜனாதிபதிக்கு அனுப்பிய பதவி விலகல் கடிதத்திற்கு இதுவரை எவ்வித பதிலும் கிடைக்கவில்லை என பேராசிரியர் அபேகோன் தெரிவித்தார். தனது பதவி விலகலை ஜனாதிபதி ஏற்றுக்கொண்டாரா அல்லது நிராகரித்தாரா என்பது குறித்து இதுவரை அதிகாரப்பூர்வமாக எவ்வித அறிவிப்பும் வெளியிடப்படவில்லை என்றும் அவர் குறிப்பிட்டார்.
தனது பதவி விலகல் முடிவானது தனிப்பட்ட காரணங்களை அடிப்படையாகக் கொண்டது என்று அவர் மேலும் தெரிவித்தார்.
பேராசிரியர் சரத் அபேகோன் முன்னதாக பேராதனைப் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தராகப் பணியாற்றியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
இதற்கிடையில், மத்திய மாகாண ஆளுநரின் செயலாளராகப் பணியாற்றிய மஞ்சுளா மடஹபொல அண்மையில் ஓய்வு பெற்றதைத் தொடர்ந்து, அந்தப் பதவியும் தற்போது வெற்றிடமாக உள்ளது.
நிரந்தர நியமனம் வழங்கப்படும் வரை, மத்திய மாகாண அரச சேவை ஆணைக்குழுவின் செயலாளர் இஷான் விஜேதிலக்க, பதில் அடிப்படையில் அந்தப் பதவிக்கு நியமிக்கப்பட்டுள்ளார்.
