Headlines

பிரிட்டன் உள்துறை அமைச்சகத்தின் புதிய சர்ச்சை: பராமரிப்பு விசாவில் உள்ளவர்களின் குடும்பங்களுக்கு வெளியேற்ற நோட்டீஸ்

பிரிட்டனில் சட்டப்பூர்வமாக வசிக்கும், பெற்றோர்களுக்கு நாட்டில் தங்க அனுமதி அளிக்கப்பட்டிருந்தாலும், 5 வயதுக்குட்பட்ட குழந்தைகளும் நாட்டை விட்டு வெளியேற வேண்டும் என பிரிட்டன் உள்துறை அமைச்சகம் (Home Office) உத்தரவிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

குழந்தைகள் நாட்டை விட்டு வெளியேற வேண்டும் என உள்துறை அமைச்சகத்தால் அனுப்பப்பட்ட ஐந்து கடிதங்களை தாம் பார்த்துள்ளதாக ‘தி கார்டியன்’ (The Guardian) செய்தி வெளியிட்டுள்ளது.

ஆறாவது கடிதம், தனது கணவருடன் பிரிட்டனில் வசிக்கும் ஆறு மாத கர்ப்பிணிப் பெண்ணுக்கு அனுப்பப்பட்டுள்ளது. அதில் அவர் தனது கணவரை விட்டுவிட்டு சொந்த நாட்டிற்குத் திரும்ப வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தக் குழந்தைகளின் பெற்றோர்கள் ‘பராமரிப்புப் பணியாளர் விசா’வில் (Care worker visas) பிரிட்டனில் தங்கியுள்ளனர். 2024 மார்ச் மாதம் வரை, அவர்கள் தங்கள் வாழ்க்கைத்துணை அல்லது குழந்தைகளை பிரிட்டனுக்கு அழைத்து வர அனுமதிக்கப்பட்டிருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

ஸ்காட்லாந்தின் பெர்த் பகுதியைச் சேர்ந்த இலங்கை பராமரிப்புப் பணியாளரான வருணி ஆரச்சிகே (Varuni Arachchige), ‘தி கார்டியன்’ இதழுக்கு அளித்த பேட்டியில்: “இந்தக் கடிதங்கள் எங்கள் குடும்பத்திற்கு வந்திருப்பது எங்களுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது,” என்றார்.

வருணி ஆரச்சிகே, தொழிற்சாலை ஒன்றில் பணிபுரியும் தனது கணவர் மற்றும் எட்டு மற்றும் ஐந்து வயதுடைய இரு குழந்தைகளுடன் ஸ்காட்லாந்தில் வசித்து வருகிறார். இவர்களது குழந்தைகள் அங்குள்ள உள்ளூர் சமூகத்துடன் ஒன்றிணைந்து, உள்ளூர் பாடசாலையில் சிறப்பாகக் கல்வி பயின்று வருகின்றனர்.

இலங்கையைச் சேர்ந்த அவர், வேதியியலில் பட்டப்படிப்பும், பகுப்பாய்வு வேதியியலில் முதுகலைப் பட்டமும் பெற்றுள்ளார். அத்துடன், டண்டீ பல்கலைக்கழகத்தில் (University of Dundee) நிலைத்தன்மை மற்றும் நீர் பாதுகாப்பு தொடர்பான எம்.எஸ்சி (MSc) பட்டமும் பெற்றுள்ளார்.

வருணியின் கணவர் இரட்டை கணிதம் மற்றும் இயற்பியல் அறிவியலில் பட்டம் பெற்றவர் ஆவார். அவரும் குழந்தைகளும் வருணியின் பராமரிப்புப் பணியாளர் விசாவைச் சார்ந்தே (Dependents) தங்கியுள்ளனர். அவர்கள் தங்களது விசா விண்ணப்பங்களுக்காக பிரிட்டன் உள்துறை அமைச்சகத்திற்கு ஆயிரக்கணக்கான பவுண்டுகளைச் செலுத்தியுள்ளனர். மேலும், அவர்கள் எந்தவொரு அரசாங்க சலுகைகளையும் கோரவில்லை என்பதுடன், முறையாக வரிகளையும் செலுத்தி வருகின்றனர்.

1,00,000 பராமரிப்புப் பணியாளர்களுடன் சுமார் 1,20,000 குடும்ப உறுப்பினர்கள் பிரிட்டனுக்கு வந்திருப்பதாக உள்துறை அமைச்சகம் மதிப்பிட்டதை அடுத்தே இந்த விதிகளில் மாற்றம் கொண்டுவரப்பட்டது.

“2022ஆம் ஆண்டு நத்தார் தினத்தில் நாங்கள் இங்கு வந்ததிலிருந்து சட்டப்பூர்வமாகவே பிரிட்டனில் வசித்து வருகிறோம்” என்று கூறிய வருணி, “எனது விசாவை உள்துறை அமைச்சகம் 2031ஆம் ஆண்டு வரை நீட்டித்துள்ளது,” எனவும் தெரிவித்தார். “ஆனால் என்னைச் சார்ந்து இங்குள்ள எனது கணவர் மற்றும் குழந்தைகளை மட்டும் நாட்டை விட்டு வெளியேறுமாறு உத்தரவிடப்பட்டுள்ளது” என அவர் வேதனை தெரிவித்தார்.

சமீபத்திய வாரங்களில் இது போன்ற பல வழக்குகளைக் கையாண்டு வருவதாக சட்ட வல்லுநர்கள் தெரிவித்துள்ளதாக ‘தி கார்டியன்’ செய்தி வெளியிட்டுள்ளது.

இது குறித்து கருத்துத் தெரிவித்த உள்துறை அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர்: “இந்த நாட்டிற்குப் பங்களிக்கும் மற்றும் இங்கு சிறந்த வாழ்க்கையை உருவாக்க விரும்பும் எவரையும் நாங்கள் எப்போதும் வரவேற்போம். ஆனால், எங்கள் எல்லைகளில் கட்டுப்பாட்டையும் ஒழுங்கையும் நிலைநாட்ட வேண்டியது அவசியம். முந்தைய அரசாங்கத்தின் கீழ் ஏற்பட்ட முன்னோடியில்லாத அளவிலான இடம்பெயர்வுகளால் ஏற்பட்ட சவால்களைச் சமாளிக்கும் வகையில், வரலாற்றிலேயே மிகப்பெரிய சட்டப்பூர்வ இடம்பெயர்வு சீர்திருத்தங்களுக்கான திட்டங்களை நாங்கள் வகுத்துள்ளோம். பிரிட்டனில் குடியேறுவது என்பது ஒரு சலுகையே தவிர, அது உரிமையல்ல. விதிகளைப் பின்பற்றி, நாட்டிற்குப் பங்களிப்புச் செய்பவர்களுக்கே அதற்கான வெகுமதி கிடைக்க வேண்டும்,” எனக் குறிப்பிட்டார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *