Headlines

பொதுமக்களின் நலனைப் பாதுகாக்க சர்வதேச நாணய நிதியத்துடன் புதிய உடன்படிக்கையை ஏற்படுத்துக; எதிர்க்கட்சித் தலைவர் அரசாங்கத்திற்கு வலியுறுத்தல்

பொதுமக்களின் நலனைப் பாதுகாப்பதற்காக சர்வதேச நாணய நிதியத்துடன் (IMF) புதிய உடன்படிக்கையொன்றை ஏற்படுத்த அரசாங்கம் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச வலியுறுத்தியுள்ளார்.

X (முன்னர் ட்விட்டர்) தளத்தில் வெளியிட்டுள்ள பதிவொன்றில் அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

தற்போதைய உலகப் பொருளாதார நிலைமைகளுக்கு மத்தியில், பிரஜைகள் மீதான சுமையைக் குறைக்கும் நோக்கில் பங்களாதேஷும் மிகவும் யதார்த்தமான IMF ஏற்பாட்டைக் கோரி வருவதாக சஜித் பிரேமதாச சுட்டிக்காட்டியுள்ளார்.

இலங்கையும் தனது பொருளாதாரக் கொள்கைத் தீர்மானங்களில் இதேபோல் பொதுமக்களின் நலனுக்கு முன்னுரிமை அளிக்க வேண்டும் என்று அவர் வலியுறுத்தினார்.

பொருளாதாரக் கொள்கைகளை வகுப்பது என்பது, தட்டுப்பாடுகள் மோசமடைந்து, விலைகள் மேலும் உயர்ந்து, குடும்பங்கள் மேலதிக இன்னல்களை எதிர்கொண்ட பின்னர் நடவடிக்கை எடுக்கும் ஒரு தாமதமான செயல்முறையாக மாறக்கூடாது என்று சஜித் பிரேமதாச எச்சரித்தார்.

துன்பங்கள் கட்டுக்கடங்காத நிலையை அடைவதற்கு முன்பே அவற்றைத் தடுப்பதுதான் தலைமைத்துவத்தின் பொறுப்பு என்று அவர் மேலும் கூறினார். ஆழ்ந்த பொருளாதார நெருக்கடியைத் தவிர்ப்பதற்கான அவகாசம் இன்னும் உள்ள நிலையில், அரசாங்கம் உடனடியாகச் செயற்பட வேண்டும் என்றும் எதிர்க்கட்சித் தலைவர் வலியுறுத்தினார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *