Headlines

மட்டக்களப்பு வாகரையில் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல்: மரக்கன்றுகள் மற்றும் கஞ்சி வழங்கி அஞ்சலி

முள்ளிவாய்க்கால் தமிழினப் படுகொலையின் 17ஆம் ஆண்டு துயர நினைவுகளைச் சுமந்து, தமிழர் தாயகப் பகுதிகளில் பல்வேறு நினைவேந்தல் நிகழ்வுகள் தொடர்ச்சியாக முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. இதன் ஒரு அங்கமாக, மட்டக்களப்பு மாவட்டத்திலும் மக்கள் தங்கள் அஞ்சலியைச் செலுத்தி வருகின்றனர்.

இதன் தொடர்ச்சியாக, மறத்தமிழர் கட்சியின் ஏற்பாட்டில் மட்டக்களப்பு, வாகரை – புச்சாங்கேணி பிரதேசத்தில் இன்று (18) காலை உணர்வுபூர்வமான நினைவேந்தல் நிகழ்வு ஒன்று நடைபெற்றது.

இந்த நிகழ்வில், இறுதிப்போரில் கொடூரமாகக் கொல்லப்பட்ட பொதுமக்களையும் உறவுகளையும் நினைவுகூர்ந்து ஈகைச்சுடர் ஏற்றப்பட்டதுடன், உயிர்நீத்தவர்களுக்காக அகவணக்கமும் செலுத்தப்பட்டது. அத்துடன், முள்ளிவாய்க்கால் துயரத்தின் வரலாற்றுப் பதிவான ‘முள்ளிவாய்க்கால் கஞ்சி’ இதன்போது பொதுமக்களுக்கு வழங்கி வைக்கப்பட்டது.

மேலும், அழிந்துபோன உயிர்களுக்கு அஞ்சலி செலுத்தும் அதேவேளை, எதிர்காலத்திற்கான புதிய நம்பிக்கையையும் உயிர்ப்பையும் விதைக்கும் அடையாளமாக நிகழ்வில் கலந்துகொண்டவர்களுக்கு மரக்கன்றுகளும் வழங்கி வைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது. இந்த நினைவேந்தல் நிகழ்வில் மறத்தமிழர் கட்சியின் இணைப்பாளர் ஆதம்குணா உள்ளிட்ட பலரும் கலந்துகொண்டு தமது கண்ணீர் அஞ்சலியைச் செலுத்தினர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *