நீர்கொழும்பு சிறைச்சாலையில் நேற்று (05) மதியம் கைதிகளுக்கிடையே ஏற்பட்ட வன்முறை மோதல், இன்று (06) மீண்டும் வெடித்துள்ளது. நேற்று இரு தரப்பு கைதிகளுக்கு இடையே ஏற்பட்ட மோதலில் இருவர் உயிரிழந்து, 38 பேர் காயமடைந்திருந்தனர். நிலைமையை கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவர பொலிஸாரும் சிறைச்சாலை அதிகாரிகளும் பெரும் முயற்சி எடுத்த போதிலும், இன்று காலை மீண்டும் மோதல் வெடித்தது.
இன்றைய மோதலில் இதுவரை மேலும் 20 கைதிகள் காயமடைந்து நீர்கொழும்பு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதன் மூலம் இரு நாட்களில் காயமடைந்தோர் எண்ணிக்கை 58க்கும் மேலாக அதிகரித்துள்ளது. சிறைச்சாலை வளாகத்தில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டிருந்த போதிலும், பதற்றம் குறையாமல் மீண்டும் மோதல் வெடித்தது சிறைச்சாலை நிர்வாகத்திற்கு பெரும் சவாலாக மாறியுள்ளது. வன்முறை சம்பவத்தைக் கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவருவதற்காக பொலிஸார் துப்பாக்கிப் பிரயோகங்களையும் மேற்கொண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. விளக்கமறியல் கைதிகள் மற்றும் தண்டனை விதிக்கப்பட்ட கைதிகள் குழுக்களுக்கிடையே ஏற்பட்ட முறுகல் நிலையே இந்த இரு நாள் வன்முறைக்கும் காரணமாக அமைந்தது.
