ஹோமாகம, மீகொட சந்திக்கு அருகில் உள்ள வெசாக் தன்சல (அன்னதானம் வழங்கப்படும் இடம்) ஒன்றிற்கு அருகே மக்கள் கூட்டம் மீது கெப் ரக வாகனம் ஒன்று மோதியதில், மூன்று பெண்கள் உட்பட ஆறு பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் பலர் காயமடைந்துள்ளனர்.
ஹோமாகம, மீகொட பகுதியில் உள்ள வீதியில் பயணித்த கெப் ரக வாகனம் ஒன்று, கட்டுப்பாட்டை இழந்து வீதியை விட்டு விலகி, வெசாக் தன்சல அருகே வரிசையில் நின்று கொண்டிருந்த மக்கள் கூட்டம் மீது மோதியுள்ளது. விபத்தை ஏற்படுத்திய வாகனம் அவ்விடத்திலிருந்து தப்பிச் சென்றிருந்தது.
இந்த விபத்தில் காயமடைந்த குறைந்தது 12 பேர் ஹோமாகம ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர். அவர்களில் சிகிச்சை பலனின்றி மூன்று பெண்கள் உட்பட ஆறு பேர் உயிரிழந்துள்ளதாக வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவித்தன.
மோதிவிட்டு தப்பிச் சென்ற (hit-and-run) இந்தச் சம்பவம் தொடர்பாக, கெப் ரக வாகனத்தின் சாரதி கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
