முள்ளிவாய்க்கால் தமிழினப்படுகொலையின் 17ஆம் ஆண்டு நினைவு தினமான இன்று (18), மன்னார் நகரப் பகுதியில் உணர்வுபூர்வமான நினைவேந்தல் நிகழ்வுகள் இடம்பெற்றன.
தமிழ்த்தேசிய வாழ்வுரிமை இயக்கத்தின் தலைவர் வி. எஸ். சிவகரன் தலைமையில், தந்தை செல்வா சிலைக்கு முன்பாக இன்று காலை இந்த அஞ்சலி நிகழ்வு நடைபெற்றது. முள்ளிவாய்க்காலில் உயிர்நீத்த உறவுகளை நினைவுகூர்ந்து பொதுச்சுடர் ஏற்றப்பட்டு, மலர்தூவி அஞ்சலி செலுத்தப்பட்டதோடு, முள்ளிவாய்க்கால் கஞ்சியும் வழங்கி வைக்கப்பட்டது.
இந்த நிகழ்வில் மனித உரிமைகள் செயற்பாட்டாளர் அருட்தந்தை ஜெயபாலன் குரூஸ் அடிகளார், மன்னார் மாவட்ட வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளை தேடும் குடும்பங்களின் சங்கத் தலைவி மனுவல் உதயச்சந்திரா மற்றும் அரசியல், பொது அமைப்புகளின் பிரதிநிதிகள் எனப் பலரும் கலந்துகொண்டு அஞ்சலி செலுத்தினர்.
இந்நிகழ்வில் தமிழ்த்தேசிய வாழ்வுரிமை இயக்கத்தின் தலைவர் வி. எஸ். சிவகரன் விடுத்துள்ள அறிக்கையில், “கடந்த 70 ஆண்டுகளாக சமத்துவ உரிமை மறுக்கப்பட்ட சமூகமாகவே தமிழர்கள் நசுக்கப்படுகின்றனர். முள்ளிவாய்க்கால் இனப்படுகொலை நடந்து 17 ஆண்டுகள் கடந்த நிலையிலும், அரச புள்ளிவிபரங்களின்படியே காணாமல் ஆக்கப்பட்ட மற்றும் கொல்லப்பட்ட 1,46,679 பேருக்கு இதுவரை சர்வதேச சமூகமோ அரசாங்கமோ நீதி வழங்கவில்லை. பாதிக்கப்பட்ட மக்களுக்கான நீதியின் கதவுகள் இன்னும் திறக்கப்படவில்லை” என வேதனை தெரிவித்தார்.
மேலும், “தமிழ்க்கட்சிகளும் புலம்பெயர் அமைப்புகளும் இனப்படுகொலையை தங்களின் அரசியல் மூலதனமாகப் பயன்படுத்துகிறார்களே தவிர, முறையான நினைவேந்தல் கட்டமைப்பையோ அல்லது நீதியைப் பெற்றுக்கொள்வதற்கான உறுதியான முன்னெடுப்புகளையோ செய்யவில்லை. அதிகாரத்தின் பக்கம் சாயும் இன்றைய சமூக நீதியால், தமிழினம் தொடர்ந்தும் ஏமாற்றப்படுகின்றது” என அவர் தனது அறிக்கையில் சுட்டிக்காட்டியுள்ளார்.
