சர்வதேச தொழிலாளர் தினத்தை முன்னிட்டு கொழும்பு உட்பட நாட்டின் பல பகுதிகளில் அரசியல் கட்சிகள் மற்றும் அமைப்புகள் நடத்தவுள்ள மே தின பேரணிகள் மற்றும் கூட்டங்களுக்காக விசேட பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக இலங்கை பொலிஸார் அறிவித்துள்ளனர்.
போக்குவரத்துக் கட்டுப்பாட்டு மற்றும் வீதிப் பாதுகாப்புக்கு பொறுப்பான பிரதிப் பொலிஸ் மா அதிபர் டபிள்யூ.பி.ஜே.சேனாதீர, இந்த நிகழ்வுகளின் போது பொதுமக்களின் பாதுகாப்பை உறுதி செய்வதற்காக விரிவான போக்குவரத்து மற்றும் பாதுகாப்புத் திட்டங்கள் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளதாகத் தெரிவித்தார்.
பிரதிப் பொலிஸ் மா அதிபர் சேனாதீர மேலும் தெரிவிக்கையில்,
“மே தின பேரணிகள் மற்றும் கூட்டங்களுக்கான அனைத்து போக்குவரத்து மற்றும் வீதிப் பாதுகாப்பு ஏற்பாடுகளும் தயார் செய்யப்பட்டுள்ளன. புலனாய்வு அறிக்கைகளின் அடிப்படையில் விசேட பாதுகாப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. அதன்படி, புலனாய்வு அதிகாரிகள் உட்பட பாதுகாப்புப் பணியாளர்கள் கடமையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
“இந்தப் மே தின பேரணிகள், கூட்டங்கள் மற்றும் அதனுடன் தொடர்புடைய நிகழ்வுகளில் கலந்துகொள்ளும் அந்தந்தக் கட்சிகளின் பங்கேற்பாளர்களுக்குப் போதிய பாதுகாப்பு வழங்கப்படும். அதிகளவான மக்கள் கூடும் மே தினக் கூட்டங்கள் மற்றும் பேரணிகளுக்காக, அந்தந்த மாகாணங்களின் கோட்ட அதிகாரிகள் மற்றும் பிரதிப் பொலிஸ் மா அதிபர்களின் மேற்பார்வையின் கீழ் அனைத்துத் திட்டங்களும் தயாரிக்கப்பட்டுள்ளன.”
