Headlines

யோஷித ராஜபக்ஷ விவகாரம்: முன்னாள் கடற்படைத் தளபதி வசந்த கரன்னகொட கைது!

முன்னாள் கடற்படைத் தளபதியான அட்மிரல் ஒஃப் த ப்ளீட் (Admiral of the Fleet) வசந்த கரன்னகொட, இலஞ்ச ஊழல் ஒழிப்பு ஆணைக்குழுவினால் (CIABOC) இன்று (03) கைது செய்யப்பட்டுள்ளார்.

முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவின் மகன் யோஷித ராஜபக்ஷ, உரிய தகுதிகளின்றி இலங்கை கடற்படையில் இணைத்துக் கொள்ளப்பட்டமை தொடர்பில் வாக்குமூலம் ஒன்றை வழங்குவதற்காக அழைக்கப்பட்டிருந்த நிலையிலேயே அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

இன்று காலை 10:05 மணியளவில் ஆணைக்குழுவின் வளாகத்தில் வாக்குமூலம் பதிவு செய்யப்பட்டதன் பின்னர், இலஞ்ச ஊழல் ஒழிப்பு ஆணைக்குழுவின் விசாரணை அதிகாரிகளால் அவர் கைது செய்யப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. சந்தேகநபரான முன்னாள் கடற்படைத் தளபதி கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படவுள்ளார்.

முன்வைக்கப்படும் குற்றச்சாட்டுகள்:

2006 ஆம் ஆண்டு இலங்கை கடற்படையின் நிறைவேற்றுப் பிரிவில் (Executive Branch) கெடட் அதிகாரியாக (Cadet Officer) யோஷித ராஜபக்ஷ உரிய தகுதிகள் இல்லாத நிலையிலும் இணைத்துக்கொள்ளப்பட்டமை தொடர்பான ஊழல் குற்றச்சாட்டுகள் வசந்த கரன்னகொட மீது முன்வைக்கப்பட்டுள்ளன.

மேலும், ஐக்கிய இராச்சியத்தில் உள்ள பிரிட்டானியா றோயல் கடற்படைக் கல்லூரியில் (Britannia Royal Naval College) அரச நிதியைப் பயன்படுத்தி அவருக்குப் பயிற்சி நெறியை வழங்கியமை தொடர்பாகவும் குற்றம் சாட்டப்பட்டுள்ளது. இது அன்றைய காலகட்டத்தில் இருந்த நிலையான நடைமுறைகளுக்கு முற்றிலும் முரணானது என ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

யோஷித ராஜபக்ஷவின் கைதும் பிணையும்:

முன்னதாக, கடந்த ஜூன் 17, 2026 அன்று, முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவின் இரண்டாவது மகனான யோஷித ராஜபக்ஷவும் இதே விவகாரம் தொடர்பாக இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவினால் கைது செய்யப்பட்டார்.

இலங்கை கடற்படையில் அவர் இணைத்துக் கொள்ளப்பட்டமை மற்றும் பிரிட்டனில் பயிற்சி பெற்றமை தொடர்பான விசாரணைகளுக்கு வாக்குமூலம் அளிக்கச் சென்றிருந்த போதே, ஊழலுக்கு உடந்தையாக இருந்த குற்றச்சாட்டின் கீழ் அவர் கைது செய்யப்பட்டார்.

கைது செய்யப்பட்ட யோஷித ராஜபக்ஷ, கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டதன் பின்னர் பிணையில் விடுவிக்கப்பட்டார். அவருக்குத் தலா 5 மில்லியன் ரூபாய் பெறுமதியான மூன்று சரீரப் பிணைகள் வழங்கப்பட்டதோடு, வெளிநாட்டுப் பயணத்தடையும் விதித்து நீதவான் உத்தரவிட்டமை குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *