முன்னாள் அமைச்சர்களான விமல் வீரவன்ச, உதய கம்மன்பில மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர் திலித் ஜயவீர உள்ளிட்ட அறுவருக்கு எதிராக நீதிமன்ற அவமதிப்பு குற்றச்சாட்டுகள் குறித்து விசாரணைகளை ஆரம்பித்துள்ளதாக குற்றப் புலனாய்வுத் திணைக்களம் (சிஐடி) இன்று (15) கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றில் அறிவித்துள்ளது.
தற்போது விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள முன்னாள் அரச புலனாய்வுச் சேவையின் (SIS) பணிப்பாளர், மேஜர் ஜெனரல் (ஓய்வுபெற்ற) சுரேஷ் சல்லே தொடர்பான விசாரணைகளுக்கு இடையூறு விளைவிக்கும் வகையிலும், நீதிமன்றத்தை அவமதிக்கும் வகையிலும் இலத்திரனியல் ஊடகங்கள் மூலம் கருத்துக்களை வெளியிட்டமை தொடர்பிலேயே இந்த விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக விசாரணையாளர்கள் நீதிமன்றில் தெரிவித்தனர்.
நாடாளுமன்ற உறுப்பினர் திலித் ஜயவீர, முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்களான விமல் வீரவன்ச, உதய கம்மன்பில, மற்றும் அசங்க நவரத்ன, சுகீஸ்வர பண்டார, மகிந்த பத்திரன ஆகியோரால் வெளியிடப்பட்ட கருத்துக்கள் குறித்தே இந்த விசாரணை நடத்தப்படுவதாக சிஐடி விரிவான அறிக்கை மூலம் நீதிமன்றத்திற்குத் தெரிவித்தது.
இந்த அறுவரையும் எதிர்வரும் ஜூலை மாதம் 1ஆம் திகதி நீதிமன்றில் முன்னிலையாகுமாறு உத்தரவிட்டு அறிவித்தல் பிறப்பிக்குமாறு சிஐடி நீதிமன்றத்திடம் கோரிக்கை விடுத்தது. எனினும், இந்தக் கட்டத்தில் அவர்கள் நீதவான் நீதிமன்றில் முன்னிலையாகுமாறு அழைப்பாணை அனுப்புவது அவசியமில்லை என நீதவான் குறிப்பிட்டார்.
இது 2024 ஆம் ஆண்டின் 8 ஆம் இலக்க நீதிமன்ற அவமதிப்பு சட்டத்தின் கீழ் வருவதால், முறையான சட்ட மதிப்பீட்டிற்குப் பின்னர் மேலதிக நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும் என்று நீதிமன்றம் அவதானித்தது. மேலும், தேவையெனில், நீதவான் நீதிமன்றத்திற்கு அழைப்பதற்குப் பதிலாக, மேல்முறையீட்டு நீதிமன்றத்தில் நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்றும் நீதிமன்றம் சுட்டிக்காட்டியது.
