2025 ஆம் ஆண்டுக்கான கல்விப் பொதுத் தராதர சாதாரண தர (க.பொ.த சா/த) பரீட்சையில் மொத்தம் 11,790 பரீட்சார்த்திகள் அனைத்துப் பாடங்களிலும் ‘A’ சித்தியைப் பெற்றுள்ளதாக பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் ஏ.கே.எஸ். இந்திகா குமாரி லியனகே அறிவித்துள்ளார்.
நேற்றிரவு 2025 ஆம் ஆண்டுக்கான சாதாரண தரப் பரீட்சை முடிவுகள் வெளியானதைத் தொடர்ந்து, பரீட்சைகள் திணைக்களத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இதனைக் குறிப்பிட்டார்.
இதன்படி, பரீட்சைக்குத் தோற்றியவர்களில் 73.16 சதவீதமானோரைப் பிரதிநிதித்துவப்படுத்தும் வகையில் மொத்தம் 225,748 மாணவர்கள் க.பொ.த உயர்தரப் (உ/த) பரீட்சைக்குத் தகுதி பெற்றுள்ளதாகவும், 7,419 பரீட்சார்த்திகள் (2.36%) அனைத்துப் பாடங்களிலும் சித்தியடையத் தவறியுள்ளதாகவும் அவர் கூறினார்.
அனைத்துப் பாடங்களிலும் ‘A’ சித்தியைப் பெற்ற பரீட்சார்த்திகளின் எண்ணிக்கை 11,790 ஆக உள்ளதாக பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் மேலும் குறிப்பிட்டார்.
கடந்த ஆண்டுடன் ஒப்பிடுகையில் பாட ரீதியான அடைவு மட்டங்களில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதைச் சுட்டிக்காட்டிய அவர், விஞ்ஞானப் பாடத்தில் சித்தி வீதம் 69.07 சதவீதத்திலிருந்து 70.1 சதவீதமாகவும், கணிதப் பாடத்தில் 71.06 சதவீதத்திலிருந்து 72.03 சதவீதமாகவும் அதிகரித்துள்ளதாகத் தெரிவித்தார்.
இதேவேளை, விடைத்தாள்களை மீள் திருத்தம் செய்வதற்கான ஒன்லைன் (Online) விண்ணப்பங்கள் 2026 ஜூன் 25 முதல் ஜூலை 08 வரை ஏற்றுக்கொள்ளப்படும் எனவும் அவர் அறிவித்தார்.
அத்துடன், 2026 ஆம் ஆண்டுக்கான க.பொ.த சாதாரண தரப் பரீட்சையை இந்த ஆண்டு டிசம்பர் 08 முதல் 17 வரை நடத்துவதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் தெரிவித்தார்.
பரீட்சைக்கான விண்ணப்பங்கள் ஜூலை மாதத்தின் முதல் வாரத்தில் கோரப்படும் எனவும் அவர் மேலும் குறிப்பிட்டார்.
