“பருவநிலை மாற்றத்தின் தாக்கங்களைக் குறைக்க நடவடிக்கை எடுப்போம்” என்ற தொனிப்பொருளில் 2026 ஆம் ஆண்டிற்கான உலகச் சுற்றுச்சூழல் தினத்தின் தேசிய நிகழ்வு இன்று (05) காலை அலரி மாளிகையில் ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்க தலைமையில் மிகவும் சிறப்பாக நடைபெற்றது.
சமூகப் பொருளாதார அபிவிருத்தி மற்றும் சுற்றுச்சூழல் பாதுகாப்பு ஆகியவற்றுக்கு இடையிலான சமநிலையைப் பேணுவதற்கு தற்போதைய அரசாங்கம் முன்னுரிமை அளித்து வருவதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு (PMD) தெரிவித்துள்ளது. இதற்கமைவாக, உலகச் சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு மே 30 முதல் ஜூன் 05 வரை “காலநிலை வாரம்” (Climate Week) பிரகடனப்படுத்தப்பட்டு, அரச, தனியார் மற்றும் சிவில் சமூக அமைப்புகளின் பங்களிப்புடன் ‘க்ளீன் ஸ்ரீலங்கா’ (Clean Sri Lanka) செயற்றிட்டத்தின் கீழ் நாடளாவிய ரீதியில் பல்வேறு சூழலியல் நிகழ்ச்சிகள் முன்னெடுக்கப்பட்டன.
பாதுகாக்கப்பட்ட பகுதிகளாக அறிவிப்பு
இந்த நிகழ்வில் ஜனாதிபதியின் தலைமையில் வனப் பாதுகாப்புத் திணைக்களத்தினால் ரித்திகல, அலியாவெட்டுனுவெவ, முலகல, கொன்கட்டியாவ மற்றும் கல்லஞ்சிய ஆகிய 5 காடுகள் பாதுகாக்கப்பட்ட காடுகளாக (Reserved forests) உத்தியோகபூர்வமாக அறிவிக்கப்பட்டன.
மேலும், மாகம மணல் மேடுகள் உணர்திறன் மிக்க பகுதியாகவும், ஆனையிறவுப் பகுதி, குடா புபுல நீரூற்று மற்றும் கபுரெல்ல சுடுநீர் ஈரநிலம் ஆகியவை பாதுகாக்கப்பட்ட பகுதிகளாகவும் பிரகடனப்படுத்தப்பட்டன.
வெளியீடுகள் மற்றும் விருது வழங்கல்
இந்நிகழ்வில் 2026 ஆம் ஆண்டிற்கான ‘சோபா’ (Soba) சுற்றுச்சூழல் சஞ்சிகையின் முதல் இதழ் மற்றும் பிளாஸ்டிக் கழிவு முகாமைத்துவம் தொடர்பான வளநூல் ஆகியவை வெளியிடப்பட்டன. அத்துடன், இந்த உலகச் சுற்றுச்சூழல் தின நிகழ்வானது கார்பன் வெளியேற்றமற்ற (Carbon-neutral) ஒரு நிகழ்ச்சியாக நடத்தப்பட்டதை உறுதிப்படுத்தும் சான்றிதழும் ஜனாதிபதியிடம் கையளிக்கப்பட்டது.
மேலும், சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு காலநிலை மாற்றப் பிரிவு மற்றும் மத்திய சுற்றாடல் அதிகார சபை ஆகியவற்றால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த சித்திரப் போட்டி மற்றும் சூழல் நட்பு ரீதியிலான கண்டுபிடிப்புகள் தொடர்பான போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்க பரிசுகளையும் சான்றிதழ்களையும் வழங்கி கௌரவித்தார்.
