அரசியலமைப்பின் 22ஆவது திருத்தத்திற்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட மனுக்கள் மீதான உயர்நீதிமன்றத்தின் தீர்ப்பைக் கொண்ட இரகசிய அறிக்கை நாளை (22) சபாநாயகரால் நாடாளுமன்றத்தில் அறிவிக்கப்படவுள்ளது.
இது தொடர்பான உயர்நீதிமன்றத்தின் தீர்ப்பை சபாநாயகர் பெற்றுக்கொண்டதைத் தொடர்ந்தே இந்த அறிவிப்பு வெளியாகவுள்ளது. உயர்நீதிமன்றத்தின் தீர்ப்பை சபாநாயகர் ஏற்கனவே பெற்றுக்கொண்டுள்ளதாக அமைச்சர் சுனில் ரணசிங்க சமீபத்தில் குறிப்பிட்டிருந்தார்.
அரசியலமைப்பின் 22ஆவது திருத்தச் சட்டமூலம் மற்றும் நீதித்துறை திருத்தச் சட்டமூலம் ஆகியவை கடந்த ஓகஸ்ட் 18 ஆம் திகதி நீதி அமைச்சர் ஹர்ஷன நாணயக்காரவினால் நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டன. இதனையடுத்து, இந்தச் சட்டமூலங்களுக்கு எதிராக 65 இற்கும் மேற்பட்ட மனுக்கள் உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டன. பிரதம நீதியரசர் தலைமையிலான ஐந்து பேர் கொண்ட நீதியரசர்கள் குழாம் முன்னிலையில் குறித்த மனுக்கள் செப்டெம்பர் 1 ஆம் திகதி விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டன.
மனுக்கள் மீதான விசாரணைகள் செப்டெம்பர் 2 ஆம் திகதி நிறைவடைந்ததைத் தொடர்ந்து, இந்தச் சட்டமூலங்களின் அரசியலமைப்புத் தன்மை குறித்த தனது தீர்ப்பை சபாநாயகருக்கு அறிவிப்பதாக உயர்நீதிமன்றம் தெரிவித்திருந்தது.
இதேவேளை, அரசியலமைப்பின் 22ஆவது திருத்தச் சட்டமூலம் தொடர்பான நாடாளுமன்ற விவாதத்தை 2026 செப்டெம்பர் 24 மற்றும் 25 ஆம் திகதிகளில் நடத்துவதற்கு நாடாளுமன்ற அலுவல்கள் பற்றிய குழு சமீபத்தில் தீர்மானித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
