ஈரான் மற்றும் அமெரிக்கா இடையிலான அமைதிப் பேச்சுவார்த்தையில் பங்கேற்பதற்காக ஈரானின் உயர்மட்டக் குழு வெள்ளிக்கிழமை பாகிஸ்தான் தலைநகர் இஸ்லாமாபாத்தை வந்தடைந்தது. ஈரானிய நாடாளுமன்ற சபாநாயகர் முகமது பக்கர் கலிபாப் மற்றும் வெளியுறவு அமைச்சர் அப்பாஸ் அரக்சி தலைமையில் சுமார் 70 பேர் கொண்ட இந்தத் தூதுக்குழு வந்துள்ளது.
முக்கிய முட்டுக்கட்டைகள்
பேச்சுவார்த்தை தொடங்கவிருக்கும் அதே வேளையில், ஈரான் சில கடும் நிபந்தனைகளை விதித்துள்ளது. முடக்கப்பட்ட ஈரானிய சொத்துக்களை விடுவிப்பதாக அமெரிக்கா அளித்த வாக்குறுதியை நிறைவேற்ற வேண்டும் என்றும், லெபனானில் போர்நிறுத்தம் அமல்படுத்தப்பட வேண்டும் என்றும் ஈரான் வலியுறுத்தியுள்ளது. இந்த நிபந்தனைகள் நிறைவேற்றப்படும் வரை பேச்சுவார்த்தை தொடங்காது என ஈரான் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
டொனால்ட் ட்ரம்ப் மற்றும் ஜே.டி வான்ஸின் நிலைப்பாடு
அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் சமூக வலைதளத்தில் வெளியிட்டுள்ள பதிவில், ஈரான் தரப்பில் அதிக பலம் இல்லை என்றும், பேச்சுவார்த்தைக்காகவே அவர்கள் தற்காலிகமாக அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் காட்டமாகத் தெரிவித்துள்ளார். அமெரிக்கக் குழுவிற்குத் தலைமை தாங்கும் துணை அதிபர் ஜே.டி வான்ஸ், “ஈரான் எங்களை ஏமாற்ற நினைத்தால், எங்களது குழு அதற்கு இணங்காது” என்று எச்சரித்துள்ளார்.
தொடரும் லெபனான் போர்
அமெரிக்கா மற்றும் ஈரான் இடையே போர்நிறுத்தம் அறிவிக்கப்பட்டிருந்தாலும், இஸ்ரேல் மற்றும் ஹிஸ்புல்லா இடையிலான மோதல் குறையவில்லை. தெற்கு லெபனானில் இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் 13 பாதுகாப்புப் படை வீரர்கள் கொல்லப்பட்டுள்ளனர். மார்ச் 2 முதல் இதுவரை லெபனானில் 1,953 பேர் உயிரிழந்துள்ளதாக அந்நாட்டு அரசு அறிவித்துள்ளது.
