கொழும்பு: புத்தாண்டு பண்டிகையை அடுத்து, கொழும்பு மற்றும் ஏனைய பிரதான நகரங்களுக்குப் பணி நிமித்தம் திரும்பும் பயணிகளின் வசதிக்காக, இலங்கை போக்குவரத்துச் சபை (இ.போ.ச.) நேற்று முதல் மேலதிக பஸ் சேவைகளை ஈடுபடுத்தியுள்ளது. பயணிகளின் தேவைக்கு ஏற்ப இந்த சேவைகள் முன்னெடுக்கப்படுவதாக இ.போ.ச. தெரிவித்தது.
புத்தாண்டு பண்டிகைக் காலத்தில் வழங்கப்பட்ட போக்குவரத்துச் சேவைகளின் மூலம், வெறும் ஆறு நாட்களில் 1 பில்லியன் ரூபா மொத்த வருமானத்தை சபை ஈட்டியுள்ளதாக அதன் தலைவர் லலித் டி அல்விஸ் தெரிவித்தார்.
மேலும், இலங்கை போக்குவரத்துச் சபையின் வரலாற்றில் மிக அதிகளவான தினசரி வருமானம் கடந்த ஏப்ரல் மாதம் 11ஆம் தேதி பதிவு செய்யப்பட்டுள்ளது. அன்றைய தினம் மாத்திரம் 213 மில்லியன் ரூபா வருமானம் ஈட்டப்பட்டதாக அவர் மேலும் குறிப்பிட்டார்.
