வெள்ளை மாளிகை செய்தியாளர்கள் சங்கத்தின் (WHCA) இரவு விருந்து சனிக்கிழமை இரவு நடைபெற்றது. இந்த நிகழ்வின் போது திடீரென அடையாளம் தெரியாத பலத்த சத்தம் கேட்டதையடுத்து, அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் மற்றும் முதல் பெண்மணி மெலனியா ட்ரம்ப் ஆகியோர் பாதுகாப்பு அதிகாரிகளால் (Secret Service) உடனடியாக அங்கிருந்து பாதுகாப்பாக வெளியேற்றப்பட்டனர்.
ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனத்தின் புகைப்படக் கலைஞர் ஒருவர் கூறுகையில், ஹோட்டல் வளாகத்தில் 4 முதல் 6 தடவைகள் பலத்த சத்தம் கேட்டதாகவும், ஆனால் அது விருந்து நடைபெற்ற இடத்திற்கு மிக அருகில் கேட்கவில்லை என்றும் தெரிவித்தார். இதனைத் தொடர்ந்து, ஜனாதிபதி ட்ரம்ப் பாதுகாப்பாக உள்ளதாக வெள்ளை மாளிகை அதிகாரி ஒருவர் உறுதிப்படுத்தியுள்ளார். ஆயினும், அங்கு ஆயுததாரி ஒருவர் ஊடுருவியிருக்கலாம் என பல ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
இந்தச் சத்தத்தைக் கேட்டவுடன் அதிர்ச்சியடைந்த விருந்தினர்கள், “கீழே படுங்கள், கீழே படுங்கள்!” என பீதியில் கத்தத் தொடங்கினர். உடனடியாக, பாதுகாப்பு கவசங்களை அணிந்த சிறப்பு பாதுகாப்பு அதிகாரிகள் மண்டபத்திற்குள் விரைந்தனர். இதனையடுத்து, நூற்றுக்கணக்கான விருந்தினர்கள் மேசைகளுக்கு அடியில் பதுங்கிக் கொண்டனர்.
பாதுகாப்பு அதிகாரிகளால் பத்திரமாக வெளியேற்றப்படுவதற்கு முன்பாக, ஜனாதிபதி ட்ரம்பும் அவரது மனைவியும் மேடைக்குப் பின்னால் குனிந்து பதுங்கியிருந்ததைக் காண முடிந்தது.
இந்த விருந்தில் சுமார் 2,600 பேர் கலந்து கொண்டிருந்தனர். அவர்கள் அனைவரும் தங்களைப் பாதுகாத்துக் கொள்ள மறைவிடங்களைத் தேடிய அதேவேளை, அங்கிருந்த உணவுப் பணியாளர்கள் மண்டபத்தின் முன்பகுதியை நோக்கி தப்பியோடினர்.
CSPAN ஊடகத்தின் நேரடி ஒளிபரப்புக் காட்சிகளின்படி, மேடையிலிருந்து பாதுகாப்பாக அழைத்துச் செல்லப்படுவதற்கு சற்று முன்னதாக, கூட்டத்தில் நடந்த ஏதோவொன்றைப் பார்த்து மெலனியா ட்ரம்ப் மிகுந்த பதற்றத்துடனும் கவலையுடனும் காணப்பட்டார்.
