Headlines

துப்பாக்கிச் சூட்டிலிருந்து தப்பிய ட்ரம்ப்: “அனைவரும் பாதுகாப்பாக உள்ளோம்” என அறிவிப்பு!

ட்ரூத் சோஷியல் (Truth Social) தளத்தில் ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் வெளியிட்ட பதிவில், தானும் தனது அமைச்சரவை உறுப்பினர்களும் பாதுகாப்பாக உள்ளதாகவும், சற்று நேரத்தில் வெள்ளை மாளிகையில் இருந்து செய்தியாளர் சந்திப்பை நடத்தவுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

“முதல் பெண்மணி, துணை ஜனாதிபதி மற்றும் அனைத்து அமைச்சரவை உறுப்பினர்களும் பூரண நலமுடன், பாதுகாப்பாக உள்ளனர்” என ட்ரம்ப் அந்தப் பதிவில் குறிப்பிட்டுள்ளார்.

“இன்னும் அரை மணி நேரத்தில் நாங்கள் உங்களுடன் பேசுவோம். இந்த நிகழ்விற்கு பொறுப்பான அனைத்து பிரதிநிதிகளுடனும் நான் பேசியுள்ளேன். அடுத்த 30 நாட்களுக்குள் இந்த நிகழ்வு மீண்டும் நடைபெறும் வகையில் மாற்றி அமைக்கப்படும்” என்றும் அவர் கூறியுள்ளார்.

மேலும், அமெரிக்க இரகசிய சேவை (US Secret Service) மற்றும் உள்ளூர் சட்ட அமலாக்க அதிகாரிகளுக்கு ட்ரம்ப் தனது பாராட்டுகளைத் தெரிவித்தார். “அவர்கள் மிக விரைவாகவும் தைரியமாகவும் செயல்பட்டனர்” என்று அவர் நெகிழ்ச்சியுடன் கூறினார்.

“துப்பாக்கிதாரி கைது செய்யப்பட்டுள்ளார். நிகழ்வை ‘தொடர்ந்து நடத்தலாம்’ என நான் பரிந்துரைத்தேன். ஆனால், முழுமையான முடிவை சட்ட அமலாக்கப் பிரிவினரே எடுப்பார்கள். அவர்கள் சற்று நேரத்தில் இறுதி முடிவை அறிவிப்பார்கள்,” என ட்ரம்ப் தெரிவித்தார்.

சம்பவ இடத்தில் பதிவான காட்சிகளின்படி, துப்பாக்கிச் சூடு சத்தம் கேட்டதும் ட்ரம்ப் மற்றும் நிகழ்வில் கலந்துகொண்டவர்கள் மேசைக்குப் பின்னால் பதுங்கிக்கொண்டனர். அப்போது அங்கிருந்தவர்கள் “கீழே படுங்கள்!” மற்றும் “அப்படியே கீழே இருங்கள்!” என பீதியில் சத்தமிட்டனர். உடனடியாக இரகசிய சேவை அதிகாரிகளால் ட்ரம்ப் அங்கிருந்து பாதுகாப்பாக வெளியேற்றப்பட்டார். அதன் பின்னர், ஆயுதம் ஏந்திய பாதுகாப்புப் படையினர் அந்த மேசையைச் சூழ்ந்துகொண்டனர்.

நிகழ்வு நடைபெற்ற மண்டபத்திற்கு வெளியே சுமார் 5 தடவைகள் துப்பாக்கிச் சூடு சத்தங்களைக் கேட்டதாக அல் ஜசிரா (Al Jazeera) தயாரிப்பாளர் கிறிஸ் ஷெரிடன் தெரிவித்தார். “எங்களால் வெடிமருந்தின் வாசனையை உணர முடிந்தது. நாங்கள் உடனடியாக தரையில் படுத்துக்கொண்டோம். அது எனக்குச் சரியாகப் பின்னால் தான் நடந்தது,” என்று அவர் சம்பவத்தை விவரித்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *