அரசியலும் அபிவிருத்தியும் வேறானவையல்ல, ஆளுகையில் நாம் எடுக்கும் ஒவ்வொரு முடிவையும் அரசியலே தீர்மானிக்கிறது என பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய தெரிவித்துள்ளார்.
தனது உத்தியோகபூர்வ பிரித்தானிய விஜயத்தின் போது, பிரைட்டனில் உள்ள சசெக்ஸ் பல்கலைக்கழகத்தின் அபிவிருத்தி ஆய்வுகள் நிறுவனத்தின் (IDS) 60 ஆவது ஆண்டு நிறைவு விழாவில் உரையாற்றும் போதே பிரதமர் இதனைக் குறிப்பிட்டார்.
மே 18 ஆம் திகதி லண்டன் ஹீத்ரோ விமான நிலையத்தை வந்தடைந்த பிரதமரை, பிரித்தானியாவிற்கான இலங்கை உயர்ஸ்தானிகர் நிமல் செனதீர மற்றும் பிரித்தானிய வெளிவிவகார இராஜாங்கச் செயலாளரின் விசேட பிரதிநிதியும் இலங்கைக்கான முன்னாள் பிரித்தானிய உயர்ஸ்தானிகருமான ரிச்சர்ட் வைல்டாஷ் ஆகியோர் வரவேற்றனர்.
தனது உத்தியோகபூர்வ கடமைகளை ஆரம்பித்த பிரதமர், சசெக்ஸ் பல்கலைக்கழகத்திற்கு விஜயம் செய்து அங்கு பல்வேறு விடயங்கள் குறித்து உரையாடினார். பொது நிகழ்வொன்றில் இலங்கையின் தற்போதைய அரசியல் மற்றும் பொருளாதார அனுபவங்களை அடிப்படையாகக் கொண்டு உரையாற்றிய அவர், ஆளுகை, பொருளாதார மீட்சி, சமூக பாதுகாப்பு மற்றும் நிறுவன மறுசீரமைப்பு ஆகியவற்றுக்கு இடையிலான சமநிலையைப் பேணுவதில் உள்ள சவால்களைச் சுட்டிக்காட்டினார்.
தேசிய பொருளாதாரத்தில் பெண்களின் பங்களிப்பு, குறிப்பாக பணம் செலுத்தி மற்றும் செலுத்தப்படாமல் செய்யப்படும் பராமரிப்புப் பணிகளை (care work) பொருளாதாரத்தின் ஒரு முக்கிய அங்கமாக அங்கீகரிப்பது குறித்து அரசாங்கம் விசேட கவனம் செலுத்தி வருவதாகவும் அவர் வலியுறுத்தினார்.
இந்த விஜயத்தின் போது, ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்தின் பூகோள மற்றும் பிராந்திய ஆய்வுகள் பாடசாலையிலும் பிரதமர் உரையாற்றவுள்ளார். அத்துடன், பிரித்தானிய வெளிவிவகார செயலாளர் யுவெட் கூப்பர், கல்விச் செயலாளர் பிரிட்ஜெட் பிலிப்சன் மற்றும் பொதுநலவாய அமைப்பின் செயலாளர் நாயகம் ஷெர்லி அயோர்கோர் போட்ச்வே ஆகியோரையும் பிரதமர் ஹரிணி அமரசூரிய சந்தித்துக் கலந்துரையாடவுள்ளார்.
