தமிழக வெற்றிக் கழகத்தின் (தவெக) ஆட்சி அமைந்து 3 வாரங்கள் நிறைவடைந்துள்ள நிலையில், முதலமைச்சர் விஜய் திருச்சி மக்களுக்கு நன்றி தெரிவிக்கும் கூட்டத்தில் பங்கேற்றார். பெரம்பூர் மற்றும் திருச்சி கிழக்கு ஆகிய இரு தொகுதிகளில் வென்ற அவர், திருச்சி கிழக்கு தொகுதி எம்.எல்.ஏ பதவியை சமீபத்தில் ராஜினாமா செய்திருந்தார். இதனையொட்டி தனக்கு வாக்களித்த மக்களுக்கு நேரில் நன்றி தெரிவிக்கவே இந்த பயணம் அமைந்தது.
இக்கூட்டத்தில் பேசிய முதலமைச்சர் விஜய், திமுகவை கடுமையாக சாடினார். “ரீல்ஸ் பார்த்துக் கொண்டிருந்த இளைஞர்கள் இன்று செய்திகளைப் பார்க்கும் அளவுக்கு அரசியல் விழிப்புணர்வு ஏற்பட்டுள்ளது. ஆனால் திமுகவினர் எங்களை ‘தற்குறி’ என விமர்சிக்கின்றனர்; அந்த தற்குறிகள் தான் இன்று திமுகவின் அரசியலை கேள்விக்குறியாக்கியுள்ளனர்” என அவர் தெரிவித்தார். மேலும், உழைக்காத ஒரு குடும்பம் தான் திமுகவின் தோல்விக்குக் காரணம் என்றும், தீய சக்தியான திமுகவும், தீர்ந்து போன மற்றொரு சக்தியும் இணைந்து தவெக ஆட்சியமைப்பதைத் தடுக்க பல சதி வேலைகளைச் செய்ததாகவும் அவர் பகிரங்கமாகக் குற்றம் சாட்டினார்.
முந்தைய ஆட்சியின் தவறுகளைச் சுட்டிக்காட்டிய விஜய், திமுகவால் மாநிலத்தின் நிதிநிலைமை முடக்கப்பட்டுள்ளதாகவும், அதனை விரைவாக சரிசெய்து விவசாயிகளுக்கான வாக்குறுதிகள் அனைத்தும் நிறைவேற்றப்படும் என்றும் உறுதியளித்தார். மேலும், திமுக ஆட்சியில் போதைப்பொருள் புழக்கம் அதிகரித்துவிட்டதாகக் குறிப்பிட்ட அவர், சட்டம் ஒழுங்கை நிலைநாட்டத் திறன்மிக்க காவலர்கள் நியமிக்கப்படுவார்கள் என்றார். குறிப்பாக, பெண்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையிலான ‘சிங்கப் பெண்கள் பாதுகாப்புத் திட்டம்’ அடுத்த வாரம் முதல் செயல்படுத்தப்படும் என்றும் அதிரடியாக அறிவித்தார். தேர்தலில் அடைந்த தோல்வி விரக்தியில்தான் மு.க.ஸ்டாலின் தொடர்ச்சியாக அறிக்கைகளை வெளியிட்டு வருகிறார் எனவும் முதலமைச்சர் விஜய் விமர்சித்தார்.
