Headlines

ஒரே வாரத்தில் 3-வது சம்பவம்: ஓமான் கடற்பரப்பில் இந்திய மாலுமிகளுடன் சென்ற MT Jalveer கப்பல் தீப்பிடித்தது!

ஓமான் கடற்கரையில் உள்ள ஷினாஸ் துறைமுகத்திற்கு (Shinas Port) அருகில் இந்திய மாலுமிகளுடன் பயணித்த ‘எம்.டி ஜல்வீர்’ (MT Jalveer) என்ற கப்பலில் மீண்டும் ஒரு தீ விபத்து ஏற்பட்டுள்ளது.

ஃபார்வர்ட் சீமென்ஸ் யூனியன் ஆஃப் இந்தியா (FSUI) தெரிவித்துள்ள தகவலின்படி, இந்த கப்பலில் 20 இந்திய மாலுமிகள் இருந்துள்ளனர். இந்த வாரத்தில் ஓமான் அருகே இந்திய மாலுமிகள் அடங்கிய கப்பல் ஒன்று விபத்து அல்லது தாக்குதலுக்கு உள்ளாவது இது மூன்றாவது முறையாகும்.

இந்த சம்பவத்தை ஓமானில் உள்ள இந்திய தூதரகம் உறுதிப்படுத்தியுள்ளது. நிலைமையை உன்னிப்பாகக் கண்காணித்து வருவதாகவும், மாலுமிகளின் பாதுகாப்பு மற்றும் மீட்புப் பணிகள் தொடர்பில் உள்ளூர் அதிகாரிகளுடன் இணைந்து செயல்பட்டு வருவதாகவும் தூதரகம் தமது X பக்கத்தில் தெரிவித்துள்ளது.

ஈரானின் மெஹ்ர் (Mehr) செய்தி நிறுவனத்தின்படி, கப்பலில் இருந்த 20 பேரில் 5 பேர் அவ்வழியாகச் சென்ற கப்பல்கள் மூலம் மீட்கப்பட்டு ஓமானுக்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளனர். ஏனைய மாலுமிகளும் பாதுகாப்பாக இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஓமான் கடற்பரப்பில் தொடரும் பதற்றம்

சமீபத்திய நாட்களில் ஓமான் கடற்பரப்பில் இந்திய மாலுமிகளுடன் பயணித்த கப்பல்கள் தொடர்ச்சியாக அச்சுறுத்தல்களை எதிர்கொண்டு வருகின்றன. இதற்கு முன்னர், பலாவு கொடியிடப்பட்ட ‘எம்.டி செட்டபெல்லோ’ (MT Settebello) என்ற எண்ணெய் கப்பல் அமெரிக்கப் படைகளால் தாக்கப்பட்டது. இதில் மூன்று இந்திய மாலுமிகள் காணாமல் போயிருந்தனர். அத்துடன் கடந்த திங்கட்கிழமை, 24 இந்திய மாலுமிகளுடன் சென்ற ‘எம்.டி மாரிவெக்ஸ்’ (MT Marivex) என்ற கப்பலும் தாக்குதலுக்கு உள்ளாகி தீப்பிடித்தது.

மத்திய கிழக்கு நாடுகளில் அதிகரித்துள்ள போர் பதற்றம் காரணமாக, உலகளாவிய எரிபொருள் விநியோகத்திற்கு மிக முக்கிய பாதையாக கருதப்படும் ஹார்முஸ் ஜலசந்தி (Strait of Hormuz) பெரும் நெருக்கடியை சந்தித்துள்ளது. ஈரானும் அமெரிக்காவும் இப்பகுதியில் தமது கட்டுப்பாடுகளை தீவிரப்படுத்தியுள்ளமையால், வர்த்தகக் கப்பல் போக்குவரத்து பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *