Headlines

இலங்கைக்கான நற்புறவுப் பயணத்தை நிறைவு செய்தது இந்தியக் கடற்படைக் கப்பல் சார்தா!

இலங்கைக்கு நற்புறவுப் விஜயம் மேற்கொண்டிருந்த இந்தியக் கடற்படைக் கப்பல் (INS) சார்தா, தனது பயணத்தை வெற்றிகரமாக முடித்துக்கொண்டு தீவிலிருந்து புறப்பட்டுள்ளதாக இலங்கை கடற்படை தெரிவித்துள்ளது.

கடந்த ஜூன் 10ஆம் திகதி இலங்கையை வந்தடைந்த இக்கப்பலுக்கு, கொழும்புத் துறைமுகத்தில் இருந்து புறப்படும்போது இலங்கை கடற்படையினரால் பாரம்பரிய கடற்படை முறைப்படி விடைபகற்பு கௌரவம் அளிக்கப்பட்டது.

இந்த விஜயத்தின் போது, INS சார்தா கப்பலின் கட்டளை அதிகாரி, மேற்கு கடற்படைப் பிராந்திய கட்டளைத் தளபதி மற்றும் கடற்படைக் கப்பல் படைப்பிரிவின் கொடி அதிகாரி ஆகியோருடன் உத்தியோகபூர்வ கலந்துரையாடல்களை நடத்தினார். மேற்கு கடற்படைத் தலைமையகம் மற்றும் கடற்படைக் கப்பல் படைப்பிரிவு தலைமையகத்தில் முறையே நடைபெற்ற இக்கூட்டங்களில், இரு கடற்படைகளுக்கும் இடையிலான பரஸ்பர நலன் சார்ந்த விடயங்கள் குறித்து கலந்துரையாடப்பட்டன.

இந்த விஜயத்தின் ஒரு பகுதியாக, இரு நாட்டு கடற்படையினருக்கும் இடையே நட்புறவு மற்றும் ஒத்துழைப்பை வலுப்படுத்தும் நோக்கில் பணியாளர்கள் பரிமாற்றத் திட்டங்களும் இடம்பெற்றன. INS சார்தா மற்றும் இலங்கை கடற்படை வீரர்கள் நட்புரீதியான கைப்பந்து போட்டி மற்றும் கூட்டு யோகா பயிற்சி ஆகியவற்றில் பங்கேற்றனர்.

மேலும், இலங்கை கடற்படை வீரர்களுக்கு INS சார்தா கப்பலைப் பார்வையிடும் வாய்ப்பு வழங்கப்பட்டதுடன், இந்தியக் கடற்படைக் கப்பலின் பணியாளர்கள் தீவின் பல கலாசார முக்கியத்துவம் வாய்ந்த இடங்களுக்கும் விஜயம் செய்தனர்.

இந்த விஜயமானது இரு நாட்டு கடற்படைப் படைகளுக்கும் இடையிலான தொழில்முறைத் தொடர்புகள் மற்றும் நற்புறவை மேலும் வலுப்படுத்தியுள்ளதாக கடற்படை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *