ஐந்து வெவ்வேறான கொலைச் சம்பவங்கள் தொடர்பில், முன்னாள் பிரதி அமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன் உட்பட மூன்று சந்தேகநபர்கள் குறித்த விபரங்களை குற்றப் புலனாய்வுத் திணைக்களம் (சிஐடி) இன்று மட்டக்களப்பு நீதவான் நீதிமன்றில் சமர்ப்பித்தது.
கிழக்கு மாகாண முன்னாள் முதலமைச்சருமான சிவநேசதுரை சந்திரகாந்தன் (பிள்ளையான்), ரசிக் மொஹமட் பைஸ் மற்றும் ஹமீட் லெப்பை மொஹமட் ஆகியோரே இந்த விசாரணையில் சந்தேகநபர்களாகப் பெயரிடப்பட்டுள்ளனர்.
2008 ஆம் ஆண்டு காலப்பகுதியில் இடம்பெற்ற தொடர்ச்சியான கொலைகள் தொடர்பான தற்போதைய விசாரணைகளின் ஒரு பகுதியாக, மட்டக்களப்பு நீதவான் அண்ணாதுரை தர்ஷினி முன்னிலையில் இந்த விபரங்கள் முன்வைக்கப்பட்டன.
சிஐடி சமர்ப்பித்த தகவல்களின்படி, இந்த விசாரணைகள் வெவ்வேறு இடங்களில் நடத்தப்பட்ட பல துப்பாக்கிச் சூட்டுச் சம்பவங்களுடன் தொடர்புடையவை.
குறித்த சம்பவங்கள் பின்வருமாறு:
- 2008 ஜனவரி 9 ஆம் திகதி, முருகன் கோவிலுக்கு அருகிலுள்ள விளையாட்டை மைதானத்திற்கு அருகில் T-56 துப்பாக்கியால் சுடப்பட்டு இருவர் கொல்லப்பட்டமை.
- 2008 மே 22 ஆம் திகதி, காத்தான்குடி பிரதான வீதியில் இருவர் சுட்டுக் கொல்லப்பட்டமை.
- வவுணதீவு காவல்துறை பிரிவுக்குட்பட்ட கொத்தியாபொலையைச் சேர்ந்த அழகதுரை தர்மலிங்கம் என்பவர், அடையாளம் தெரியாத ஆயுதக் குழுவினரால் சுட்டுக் கொல்லப்பட்டமை.
இது தொடர்பான மேலதிக விசாரணைகளை குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தினர் மேற்கொண்டு வருகின்றனர்.
