Headlines

இயற்கை சீற்றங்களை முறியடித்து புத்துயிர் பெற்ற மலையக ரயில் மார்க்கம்: நானுஓயாவிலிருந்து பதுளைக்கு மீண்டும் பயணம்!

டித்வா சூறாவளி மற்றும் தொடர்ச்சியான மண்சரிவுகள் காரணமாகக் கடுமையாகப் பாதிக்கப்பட்டிருந்த மலையக ரயில் மார்க்கத்தின் சேவைகள் மீண்டும் படிப்படியாக வழமைக்குத் திரும்பி வருகின்றன. இதன் ஒரு கட்டமாக, பதுளையிலிருந்து அம்பேவெல வரை மட்டுப்படுத்தப்பட்டிருந்த ரயில் சேவைகள் இன்று சனிக்கிழமை (20) முதல் நானுஓயா வரை நீடிக்கப்பட்டுள்ளன.

மத்திய மலைநாட்டிற்கான ரயில் சேவைகள் இயற்கையான பேரிடர்களால் முடங்கியிருந்த நிலையில், ரயில்வே திணைக்கள ஊழியர்களின் துரித நடவடிக்கைகளாலும் கடின உழைப்பினாலும் இந்த மார்க்கம் வெற்றிகரமாகப் புனரமைக்கப்பட்டு, பயணிகளின் போக்குவரத்து வசதிக்காக மீண்டும் திறக்கப்பட்டுள்ளது.

நானுஓயாவிலிருந்து பதுளை வரையிலான சுமார் 85 கிலோமீற்றர் தூரத்தைக் கொண்ட இந்த ரம்மியமான ரயில் பயணத்திற்கு 3 மணித்தியாலங்கள் 15 நிமிடங்கள் வரை நேரம் எடுக்கும் என ரயில்வே திணைக்களம் தகவல் வெளியிட்டுள்ளது.

நுவரெலியா மாவட்ட அபிவிருத்திக் குழுவின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான மஞ்சுள சுரவீர ஆராச்சி மற்றும் நானுஓயா சிரேஷ்ட மாவட்ட ரயில்வே செயற்பொறியியலாளர் தனுஷ்கா ஆகியோரின் தலைமையில், விசேட சமய வழிபாடுகளுடன் இந்த ரயில் சேவை இன்று சம்பிரதாயபூர்வமாக ஆரம்பித்து வைக்கப்பட்டது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *