Headlines

பிரதமர் ஹரிணி அமரசூரியவுடன் சார்க் பொதுச்செயலாளர் கோலம் சர்வார் சந்திப்பு

தெற்காசிய பிராந்திய ஒத்துழைப்பு சங்கத்தின் (சார்க் – SAARC) பொதுச்செயலாளர் முகமது கோலம் சர்வார், பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரியவை (22) அலரி மாளிகையில் சந்தித்து விடைபெறும் வகையிலான மரியாதை நிமித்தமான கலந்துரையாடலை மேற்கொண்டார்.

இந்தச் சந்திப்பின் போது, பிராந்திய ஒத்துழைப்பை மேம்படுத்துவதிலும் சார்க் அமைப்பின் நோக்கங்களை முன்னெடுப்பதிலும் பொதுச்செயலாளர் ஆற்றிய முயற்சிகளைப் பிரதமர் பாராட்டினார்.

நாளை கொழும்பில் நடைபெறவுள்ள ‘சிறுவர்களுக்கு எதிரான வன்முறைகளை ஒழித்தல்’ தொடர்பான எதிர்வரும் அமைச்சர்கள் மாநாடு குறித்து இக்கலந்துரையாடலில் கவனம் செலுத்தப்பட்டது. தெற்காசியா முழுவதும் உள்ள சிறுவர்களின் உரிமைகள், பாதுகாப்பு மற்றும் நல்வாழ்வைப் பேணுவதற்கு கூட்டுப் பிராந்திய நடவடிக்கையின் முக்கியத்துவத்தைப் பிரதமர் அமரசூரிய வலியுறுத்தினார்.

சார்க் செயலகத்தின் தற்போதைய பணிகள் மற்றும் சார்க் கட்டமைப்பின் கீழ் செயல்படுத்தப்பட்டு வரும் முக்கிய பிராந்திய முயற்சிகள் குறித்து பொதுச்செயலாளர் பிரதமருக்கு விளக்கமளித்தார். உறுப்பு நாடுகளுக்கிடையேயான மேம்பட்ட ஒத்துழைப்பின் மூலம் உணவுப் பாதுகாப்பை வலுப்படுத்துதல் மற்றும் சிறுவர் ஊட்டச்சத்தை மேம்படுத்துதல் ஆகியவற்றிற்கான சார்க் அமைப்பின் முயற்சிகள் குறித்து இதன்போது விசேட கவனம் செலுத்தப்பட்டது.

சிறந்த நடைமுறைகளைப் பரிமாறிக்கொள்ளவும், பிராந்திய இணைப்பு மற்றும் ஒத்துழைப்பை மேம்படுத்தவும் சார்க் அமைப்புக்கும் ஏனைய பிராந்திய அமைப்புகளுக்கும் இடையே நெருக்கமான ஈடுபாட்டை வளர்ப்பதன் அவசியத்தையும் பிரதமர் வலியுறுத்தியதாகப் பிரதமரின் அலுவலகம் தெரிவித்துள்ளது.

சார்க் அமைப்புடனான இலங்கையின் நீண்டகால அர்ப்பணிப்பை மீண்டும் உறுதிப்படுத்திய பிரதமர், பிராந்திய அமைதி, செழிப்பு மற்றும் மக்களை மையமாகக் கொண்ட அபிவிருத்தியை மேம்படுத்துவதை நோக்கமாகக் கொண்ட இவ்வமைப்பின் முயற்சிகளுக்கு நாட்டின் தொடர்ச்சியான ஆதரவை உறுதியளித்ததாக பிரதமரின் ஊடகப் பிரிவு (PMD) மேலும் தெரிவித்துள்ளது.

இந்தச் சந்திப்பில் காத்மாண்டுவில் உள்ள சார்க் செயலகத்தின் பணிப்பாளர் (ESC) வருண வில்பத, பிரதமரின் செயலாளர் பிரதீப் சபுதந்திரி, பிரதமரின் மேலதிக செயலாளர் சாகரிகா போகஹவத்த மற்றும் வெளிவிவகார, வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலா அமைச்சின் அதிகாரிகள் கலந்துகொண்டனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *