ஈரானின் மறைந்த உச்சத் தலைவர் அயதுல்லா அலி கமேனியின் அரச இறுதிச் சடங்குகளில் கலந்துகொள்வதற்காகப் பிரதி சபாநாயகர் டொக்டர் ரிஸ்வி சாலிஹ் தெஹ்ரானுக்குப் புறப்பட்டுச் சென்றுள்ளார்.
ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்கவைப் பிரதிநிதித்துவப்படுத்தும் வகையிலேயே பிரதி சபாநாயகர் இந்த இறுதிச் சடங்குகளில் கலந்துகொள்ளவுள்ளார்.
அத்துடன், அலி கமேனியின் இறுதிச் சடங்குகளில் கலந்துகொள்வதற்காக எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் ரவூப் ஹக்கீமும் தெஹ்ரானுக்குப் புறப்பட்டுச் சென்றுள்ளார்.
இந்த உத்தியோகபூர்வ இறுதிச் சடங்குகள் ஈரானின் தலைநகரான தெஹ்ரானில் சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் (ஜூலை 4, 5) நடைபெறவுள்ளன.
ஈரான் மீதான அமெரிக்க-இஸ்ரேல் போரின் முதல் நாளான கடந்த பெப்ரவரி 28ஆம் திகதியன்று, அவரது வளாகத்தின் மீது நடத்தப்பட்ட கூட்டு அமெரிக்க-இஸ்ரேலிய வான்வழித் தாக்குதலில் 86 வயதான கமேனி கொல்லப்பட்டார்.
ஈரானின் அரச செய்தி ஒளிபரப்பான IRIB-ஐ மேற்கோள்காட்டி அல் ஜசீரா வெளியிட்ட செய்தியின்படி, ஈரானின் முன்னாள் உச்சத் தலைவர் அலி கமேனியின் இறுதிச் சடங்கில் 100-க்கும் மேற்பட்ட நாடுகளின் பிரதிநிதிகள் கலந்துகொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
