Headlines

நீட் முறைகேடு: ‘காணவில்லை’ எனப் பரவிய சர்ச்சைக்குப் பின், மௌனம் கலைத்தார் நடிகர் மாதவன்!

நாடு முழுவதும் நீட் தேர்வு முறைகேடுகள், வினாத்தாள் கசிவு மற்றும் மாணவர்கள் போராட்டம் எனப் பெரும் பரபரப்பு நிலவி வருகிறது. இத்தருணத்தில், சமூக வலைத்தளங்களில் நடிகர் மாதவனைக் ‘காணவில்லை’ எனக் கல்லூரி மாணவர்கள் ஒட்டிய போஸ்டர்கள் பெரிய அளவில் வைரலாகின. பூனே திரைப்படக் கல்லூரித் தலைவரான நடிகர் மாதவனின் அலுவலகக் கதவிலேயே, அவரது மௌனத்தைக் கேள்வி கேட்டு இப்போஸ்டர்கள் ஒட்டப்பட்டிருந்தன.

ஏற்கனவே நடிகை ஆலியா பட், நடிகர் சல்மான்கான், ராஜ்குமார் ராவ், கமல்ஹாசன் உட்படப் பல திரை பிரபலங்கள் நீட் விவகாரத்தில் தங்களது ஆதரவை மாணவர்களுக்கு வழங்கியுள்ள நிலையில், மாதவன் மௌனமாக இருந்தது விமர்சனத்திற்கு உள்ளானது. இந்நிலையில், அந்த விமர்சனங்களுக்குப் பதிலளிக்கும் வகையில் அவர் தனது சமூக வலைத்தள பக்கத்தில் நீண்ட பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.

கல்வியின் முக்கியத்துவம்:

நடிகர் மாதவன் வெளியிட்ட பதிவில், “நமது நாட்டின் எதிர்காலத்தைத் தீர்மானிக்கும் மிகபெரிய சக்தி கல்விதான். ஒவ்வொரு மாணவருக்கும் நியாயமான, வெளிப்படையான, திறமையின் அடிப்படையில் இயங்கும் கல்வி அமைப்பு கிடைக்க வேண்டும்” என்று தனது கருத்தைத் தெளிவாகப் பதிவு செய்துள்ளார்.

பகிரப்பட்ட கவலை:

மேலும் அவர் கூறுகையில், “இன்று பல மாணவர்களும், பெற்றோர்களும் உணரும் கவலையையும், ஏமாற்றத்தையும், நானும் பகிர்ந்து கொள்கிறேன். வினாத்தாள் கசிவு போன்ற சம்பவங்கள் ஒரு தேர்வை மட்டும் பாதிக்காது. ஆயிரக்கணக்கான மாணவர்களின் கனவுகளையும், குடும்பங்களையும், நம்பிக்கையையும் உடைக்கிறது.” என்று தனது வேதனையை வெளிப்படுத்தியுள்ளார்.

வலுவான நடவடிக்கை:

இந்த விவகாரத்தில் தொடர்புடையவர்கள் மீது விரைவாகவும், எளிதாகவும் வலுவான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், இனிமேல் இது போன்ற சம்பவங்கள் நடக்காத அளவுக்குக் கல்வி அமைப்பை வலுப்படுத்த வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

மாணவர்களுக்கு அட்வைஸ்:

மனம் உடைந்து இருக்கும் ஒவ்வொரு மாணவருக்கும் அவர் தனது ஆதரவைத் தெரிவித்துள்ளார். “தயவு செய்து நம்பிக்கையை மட்டும் இழக்காதீர்கள். உங்கள் திறமையும், உழைப்பும் எந்த அமைப்பின் குறைபாடுகளையும் விடப் பெரியது” என்று அவர் மாணவர்களுக்குத் தைரியம் அளித்துள்ளார்.

போராட்டக்காரர்களுக்கு எச்சரிக்கை:

அமைதியான முறையில் சீர்திருத்தத்துக்காகப் போராடுபவர்களைப் பாராட்டிய அவர், “அந்தப் போராட்டத்தை வேறு திசைக்குக் கொண்டு செல்ல முயற்சிப்பவர்களிடம் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்” என்றும் கேட்டுக் கொண்டுள்ளார்.

ரசிகர்கள் ரியாக்ஷன்:

மாதவன் இந்த லேட்டான பதிவை வெளியிட்டாலும், சரியான விஷயத்தைச் சொல்லியிருப்பதாக அவரது ரசிகர்கள் கருத்துத் தெரிவித்து வருகின்றனர். இன்னும் ஒரு சிலர், அவர் இதற்கு முன்னாடியே இதைப் பேசி இருக்க வேண்டும் என்றும் தங்களது கருத்தைப் பதிவு செய்துள்ளனர். கடந்த மே மாதம் நடந்த நீட் தேர்வு வினாத்தாள் கசிவு காரணமாக, மாணவர்கள் போராட்டம் நடத்தி வருவது, இப்போது சமூக வலைத்தளம் முழுக்கப் பெரும் பேசுபொருளாகவே உள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *