Headlines

கரூரில் முதல்வர் வழங்கிய அரசு பணி நியமனங்கள் ரத்து! மதுரை உயர் நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு

மதுரை: கரூர் கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு, தமிழக முதல்வர் விஜய் வழங்கிய அரசுப் பணி நியமன ஆணைகளை, சென்னை உயர் நீதிமன்றத்தின் மதுரை கிளை ரத்து செய்து உத்தரவிட்டுள்ளது. பாதிக்கப்பட்ட குடும்பத்தினர் 31 பேருக்கு வழங்கப்பட்ட இந்த வேலைவாய்ப்புகள் செல்லாது என்று நீதிமன்றம் திட்டவட்டமாக அறிவித்துள்ளது.

இந்த மாதத்தின் தொடக்கத்தில், ஜூலை 10 ஆம் திகதி கரூருக்குச் சென்றிருந்த முதல்வர் விஜய், மக்கள் சந்திப்பு நிகழ்ச்சியில் பங்கேற்றார். அப்போது, கூட்ட நெரிசல் விபத்தில் உயிரிழந்தவர்களின் வாரிசுகளை நேரில் சந்தித்து, அவர்களுக்குக் கருணை அடிப்படையில் அரசுப் பணிக்கான நியமன ஆணைகளை வழங்கியிருந்தார்.

அரசின் இந்த முடிவுக்கு எதிராக, உயர் நீதிமன்ற மதுரை கிளையில் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. இந்த மனுவை விசாரித்த நீதிமன்றம், ஆரம்பத்தில் அரசுப் பணி வழங்கத் தடையில்லை என்றும், ஆனால் அவை தற்காலிக அடிப்படையிலேயே வழங்கப்பட வேண்டும் என்றும் கூறியிருந்தது.

தொடர்ந்து நடைபெற்ற வழக்கின் விசாரணையில், அரசுத் தரப்பு மற்றும் மனுதாரர் தரப்பு வாதங்களைக் கேட்டறிந்த நீதிபதி, இன்று இந்த முக்கியத் தீர்ப்பை அளித்துள்ளார்.

நீதிமன்றம் தனது உத்தரவில், பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு நிதி மற்றும் பொருளாதார உதவிகளை வழங்கலாம் என்று குறிப்பிட்டது. அதேசமயம், “ஒரு விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு உடனடியாக அரசு வேலை வழங்க முடியுமா? பாதிக்கப்பட்டவர்களுக்குச் சுய வேலைவாய்ப்புகளை உருவாக்கி, அவர்களைத் தொழில் தொடங்குபவர்களாக மாற்ற நடவடிக்கை எடுக்கலாம். கருணை அடிப்படையில் அரசுப் பணி வழங்குவதற்குத் தெளிவான வழிகாட்டுதல்கள் உள்ளன” என்று சுட்டிக்காட்டியது.

பாதிக்கப்பட்டவர்களுக்குச் சாதாரண அரசுப் பணி வழங்கப்பட்டிருப்பதை நீதிமன்றம் ஏற்க முடியாது என்றும் நீதிபதி கூறினார். “கருணை அடிப்படையில் வேலை பெறுவதற்காக மற்ற அரசு ஊழியர்களின் வாரிசுகள் பலர் காத்திருக்கும் போது, இவர்களுக்கு மட்டும் எப்படி வழங்க முடியும்? சிவகாசி விபத்தில் இறந்தவர்களின் குடும்பத்திற்கு அரசு பணி வழங்க முடியுமா?” என்று சரமாரி கேள்விகளை எழுப்பிய நீதிபதி, அரசு வேலை வழங்கும் அரசாணையை ரத்து செய்து உத்தரவிட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *