தொழில் அமைச்சரும், நிதி மற்றும் திட்டமிடல் பிரதி அமைச்சருமான கலாநிதி அனில் ஜெயந்த பெர்னாண்டோ, இலங்கையில் இந்திய அரசாங்கத்தின் நிதி உதவியுடன் நடைமுறைப்படுத்தப்பட்டு வரும் அபிவிருத்தித் திட்டங்களைப் பாதிக்கும் சவால்களை மீளாய்வு செய்வதற்காக, இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் சந்தோஷ் ஜாவை இன்று (27) சந்தித்துக் கலந்துரையாடினார்.
ஜனாதிபதி செயலகத்தில் நடைபெற்ற இச்சந்திப்பில், இந்திய நிதியுதவியுடன் கூடிய உட்கட்டமைப்புத் திட்டங்களை நடைமுறைப்படுத்தும் போது ஏற்படும் பிரச்சினைகள் மற்றும் சவால்களை முறியடிப்பதற்குத் தேவையான நடவடிக்கைகள் குறித்துக் கவனம் செலுத்தப்பட்டதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நடைபெற்று வரும் திட்டங்களின் தொடர்ச்சியை உறுதி செய்வதற்குத் தேவையான ஒப்பந்தங்களைப் புதுப்பிப்பது குறித்து விசேட கவனம் செலுத்தப்பட்டது.
போக்குவரத்து, நெடுஞ்சாலைகள் மற்றும் நகர அபிவிருத்தி; துறைமுகங்கள் மற்றும் சிவில் விமானப் போக்குவரத்து; பெருந்தோட்டங்கள் மற்றும் சமூக உட்கட்டமைப்பு; வீடமைப்பு நிர்மாணம் மற்றும் நீர் வழங்கல்; மீன்பிடி, நீர்வாழ் மற்றும் கடற் வளங்கள்; விஞ்ஞானம் மற்றும் தொழில்நுட்பம்; மற்றும் நீதி மற்றும் தேசிய ஒருமைப்பாடு உள்ளிட்ட பல அமைச்சுக்களினூடாக நடைமுறைப்படுத்தப்படும் திட்டங்கள் குறித்தும் இக்கலந்துரையாடலில் உள்ளடக்கப்பட்டது.
பேரிடர் மீட்பு மற்றும் மறுசீரமைப்பு முயற்சிகளுக்காக இந்திய அரசாங்கத்தினால் வழங்கப்பட்ட 450 மில்லியன் அமெரிக்க டொலர் கடனுதவி மற்றும் மானிய உதவியின் மூலம் ஆதரிக்கப்படும் திட்டங்கள் குறித்தும் இச்சந்திப்பில் மீளாய்வு செய்யப்பட்டதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு குறிப்பிட்டுள்ளது.
இந்த அபிவிருத்தி முயற்சிகளின் முன்னேற்றத்தைக் கண்காணிக்கவும் மேற்பார்வையிடவும் ஜனாதிபதி செயலகத்தில் பிரத்தியேக அலகு ஒன்றை நிறுவுவது குறித்தும் பங்கேற்பாளர்கள் கலந்துரையாடினர்.
இந்நிகழ்வில் ஜனாதிபதியின் பணிக்குழாம் பிரதானி பிரபாத் சந்திரகீர்த்தி, நிதி, திட்டமிடல் மற்றும் பொருளாதார அபிவிருத்தி அமைச்சின் செயலாளர் கலாநிதி ஹர்ஷன சூரியப்பெரும, மீன்பிடி, நீர்வாழ் மற்றும் கடற் வளங்கள் அமைச்சின் செயலாளர் கலாநிதி கோலித கமல் ஜினதாச மற்றும் ஜனாதிபதி செயலகம் மற்றும் நிதி, திட்டமிடல் மற்றும் பொருளாதார அபிவிருத்தி அமைச்சின் அதிகாரிகள் கலந்துகொண்டனர்.
இந்திய உயர்ஸ்தானிகராலயம் சார்பில் பிரதி உயர்ஸ்தானிகர் மைத்ரி குல்கர்னி, முதன்மைச் செயலாளர் (அரசியல்) நவ்யா சிங்லா, முதன்மைச் செயலாளர் (வர்த்தகம்) சௌரப் சப்லோக் மற்றும் பிற அதிகாரிகள் கலந்துகொண்டனர்.
