இலங்கையைச் சூழவுள்ள பல கடற்பரப்புகளில் கடும் கொந்தளிப்பான நிலை நிலவும் என எச்சரித்துள்ள வளிமண்டலவியல் திணைக்களம், மறு அறிவித்தல் வரை குறிப்பிட்ட கடற்பரப்புகளுக்குள் நுழைவதைத் தவிர்த்து, அவதானமாக இருக்குமாறு கடற்படை மற்றும் மீன்பிடி சமூகங்களுக்கு அறிவுறுத்தியுள்ளது.
இன்று (01) காலை 7:00 மணிக்கு வெளியிடப்பட்ட, அடுத்த 24 மணித்தியாலங்களுக்கான கடல்சார் வானிலை முன்னறிவிப்பின்படி, சிலாபம் முதல் கொழும்பு மற்றும் காலி ஊடாக மாத்தறை வரையான கடற்பரப்புகளில் அவ்வப்போது மழை பெய்யக்கூடும். தென்மேற்குத் திசையிலிருந்து காற்று வீசும். காற்றின் வேகம் மணித்தியாலத்துக்கு 30 முதல் 40 கிலோமீட்டர் வரை காணப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
காங்கேசன்துறை முதல் மன்னார், கொழும்பு, காலி மற்றும் அம்பாந்தோட்டை ஊடாக பொத்துவில் வரையான கடற்பரப்புகளில் காற்றின் வேகம் அவ்வப்போது மணித்தியாலத்துக்கு 60–70 கிலோமீட்டர் வரை அதிகரிக்கக்கூடும் என திணைக்களம் எச்சரித்துள்ளது. இந்த கடற்பரப்புகள் அவ்வப்போது மிகவும் கொந்தளிப்பாகக் காணப்படும். இந்த பகுதிகளுக்கு கடற்படை மற்றும் மீன்பிடி சமூகங்கள் செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
திருகோணமலை முதல் முல்லைத்தீவு ஊடாக காங்கேசன்துறை வரையான கடற்பரப்புகளில் காற்றின் வேகம் அவ்வப்போது 50–60 கிலோமீட்டர் வரை அதிகரிக்கக்கூடும். இந்த கடற்பரப்புகள் அவ்வப்போது கொந்தளிப்பாகக் காணப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த பகுதிகளில் மீன்பிடி மற்றும் கடற்படை நடவடிக்கைகளில் ஈடுபடுவோர் அவதானத்துடன் இருப்பதுடன், தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்றும் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.
மேலும், மன்னார் முதல் கொழும்பு, காலி மற்றும் அம்பாந்தோட்டை ஊடாக பொத்துவில் வரையான கடற்பரப்புகளில் அலைகளின் உயரம் சுமார் 2.5–3.0 மீற்றர் வரை அதிகரிக்கக்கூடும் என்றும் வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
