Headlines

முன்னாள் அமைச்சர் அகில விராஜ் காரியவசம் இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவினால் கைது!

முன்னாள் அமைச்சரும் ஐக்கிய தேசியக் கட்சியின் (UNP) பொதுச் செயலாளருமான அகில விராஜ் காரியவசம், இலஞ்ச அல்லது ஊழல் பற்றிய குற்றச்சாட்டுக்களைப் புலனாய்வு செய்யும் ஆணைக்குழுவின் (CIABOC) அதிகாரிகளால் இன்று (05) கைது செய்யப்பட்டுள்ளார்.

முன்னெடுக்கப்பட்டு வரும் விசாரணை ஒன்று தொடர்பில் வாக்குமூலம் வழங்குவதற்காக, அவர் இன்று காலை இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவில் ஆஜராகியிருந்தார். வாக்குமூலம் பதிவு செய்யப்பட்டதைத் தொடர்ந்து, அவர் அதிகாரிகளால் தடுப்புக் காவலில் எடுக்கப்பட்டார்.

ஜனாதிபதியின் சிரேஷ்ட ஆலோசகராக (நிர்வாக விவகாரங்கள்) அவர் பணியாற்றிய காலத்தில், அந்த அலுவலகத்திற்கு நியமிக்கப்பட்டிருந்த நான்கு ஊழியர்களை, அவர் தனது தனிப்பட்ட வேலைகளுக்குப் பயன்படுத்தியதாகக் குற்றச்சாட்டுக்கள் எழுந்துள்ளன. இந்த அரச ஊழியர்களை துஷ்பிரயோகம் செய்த குற்றச்சாட்டு தொடர்பிலேயே இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவின் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

இந்தச் சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளுக்காக வாக்குமூலம் வழங்குமாறு அவருக்கு அழைப்பு விடுக்கப்பட்டிருந்த நிலையிலேயே, அவர் இன்று கைது செய்யப்பட்டுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *