Headlines

மலையக மக்களின் உரிமைகளை உறுதிப்படுத்த அரசு உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும்: சர்வஜன தோட்டத் தொழிலாளர் சங்கம் வலியுறுத்தல்

மலையகத் தோட்டப் பகுதிகளில் வாழும் மக்களின் உரிமைகள், பாதுகாப்பு மற்றும் அடிப்படை வசதிகள் தொடர்பாக அரசாங்கம் உடனடி கவனம் செலுத்தி, காத்திரமான நடவடிக்கைகளை எடுக்க வேண்டுமென சர்வஜன தோட்டத் தொழிலாளர் சங்கம் வலியுறுத்தியுள்ளது.

இதுதொடர்பாக ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவித்த சங்கத்தின் ஊடகப் பேச்சாளர் எம். முத்துக்குமார், தற்போதைய சூழலில் தோட்டத் தொழிலாளர்கள் பல்வேறு அநீதிகளுக்கும் அழுத்தங்களுக்கும் முகம் கொடுத்து வருவதாகக் குற்றம் சாட்டினார்.

தேசிய பேரிடர் மேலாண்மை மற்றும் தொழிற்சங்கச் செயற்பாடுகள் குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில், “மழைக்காலங்களில் தோட்டப் பகுதிகளில் ஏற்படக்கூடிய இயற்கை அனர்த்த பாதிப்புகளைத் தடுக்கும் நோக்கில், தேசிய பேரிடர் தொடர்பான ஒருங்கிணைந்த செயற்பாட்டு அமைப்பு ஒன்று பிரத்தியேகமாக உருவாக்கப்பட வேண்டும்.

சில இடங்களில் பாரம்பரிய தொழிற்சங்கங்களின் செல்வாக்கு குறைந்துள்ள நிலையில், தொழிலாளர்களின் உரிமைகள் உரியவாறு பாதுகாக்கப்படவில்லை. சர்வஜன தோட்டத் தொழிலாளர் சங்கம் எந்தவொரு தோட்டப் பகுதியிலும் மக்களுக்காக ஆதரவாக களமிறங்கத் தயாராக உள்ளது. எமது சங்கத்தில் உறுப்பினர்களாக இல்லாத தொழிலாளர்களுக்கும் தேவையான நேரத்தில் உதவ நாங்கள் தயாராகவே இருக்கிறோம்,” எனக் குறிப்பிட்டார்.

அரசாங்கத்திற்கான கோரிக்கைகள் மற்றும் எதிர்காலத் திட்டங்கள் குறித்து எம். முத்துக்குமார் மேலும் வலியுறுத்தியதாவது:

“மாற்றத்திற்காக மலையக மக்களால் வழங்கப்பட்ட ஆணையை அரசாங்கம் மதிக்க வேண்டும். தோட்ட மக்களுக்கான வீடமைப்புத் திட்டங்கள், அடிப்படை வசதிகள், வேலைவாய்ப்புகள் மற்றும் இளைஞர்களுக்கான முன்னேற்றத் திட்டங்கள் எவ்வித தாமதமுமின்றி விரைவாக நடைமுறைப்படுத்தப்பட வேண்டும்.

இந்த வாக்குறுதிகள் நிறைவேற்றப்படாவிட்டால், தோட்டத் தொழிலாளர்களின் நியாயமான உரிமைகளுக்காக சர்வஜன தோட்டத் தொழிலாளர் சங்கம் தொடர்ந்து ஜனநாயக ரீதியில் குரல் கொடுக்கும்,” என அவர் தெரிவித்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *