நிலவும் சீரற்ற வானிலை காரணமாக, எதிர்வரும் ஐந்தாம் தர புலமைப்பரிசில் பரீட்சை மற்றும் க.பொ.த உயர்தரப் பரீட்சைகள் (A/L) தொடர்பிலான விசேட கலந்துரையாடல் ஒன்று நாளை (05) நடைபெறவுள்ளது.
இக்கலந்துரையாடலில் வளிமண்டலவியல் திணைக்களம், அனர்த்த முகாமைத்துவ நிலையம் (DMC) மற்றும் பரீட்சைத் திணைக்களம் ஆகியவற்றின் பிரதிநிதிகள் கலந்துகொள்ளவுள்ளனர்.
தற்போதைய மழைக்கால நிலையில் பரீட்சைகளை நடத்துவது தொடர்பில் எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகள் குறித்து இக்கலந்துரையாடலில் கவனம் செலுத்தப்படும் என வளிமண்டலவியல் திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் அஜித் விஜேமான்ன தெரிவித்தார்.
இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில், “உயர்தரப் பரீட்சைக் காலத்தில் நிலவும் வானிலை நிலைமை மற்றும் அதற்கு எவ்வாறு பதிலளிப்பது என்பது குறித்து விவாதிக்க ஆகஸ்ட் 5ஆம் திகதி பரீட்சைத் திணைக்களம் மற்றும் அனர்த்த முகாமைத்துவ நிலையத்துடன் ஒரு கூட்டத்திற்கு ஏற்பாடு செய்துள்ளோம். ஆகஸ்ட் மாதம் பொதுவாகக் குறைந்த மழையைப் பெறும் மாதமாகும், தற்போதைய நிலைமைகள் பருவமழை காரணமாகத் தற்காலிகமானவை. ஆகஸ்ட் 6, 7 மற்றும் 8 ஆம் திகதிகளுக்குப் பிறகு மழை குறையும் என எதிர்பார்க்கப்படுகிறது. பரீட்சைகள் ஆகஸ்ட் 10 ஆம் திகதிக்கு பின்னர் ஆரம்பமாவதால், அதற்குள் பாதிப்பு கணிசமாகக் குறைவாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது,” என்றார்.
இருப்பினும், பசிபிக் பெருங்கடலில் ஏற்பட்டுள்ள வெப்பமண்டல சூறாவளி நடவடிக்கைகளின் தாக்கம் காரணமாக ஆகஸ்ட் 6ஆம் திகதிக்குப் பின்னர் இலங்கையில் மழை வீழ்ச்சி சற்று அதிகரிக்கக்கூடும் என்றும் விஜேமான்ன மேலும் குறிப்பிட்டார்.
