இந்தியாவுடனான இறுதிப் போட்டி: பாகிஸ்தான் அணியில் மாற்றம் இருக்குமா?
துபாய்: நாளை (28) நடைபெறவுள்ள ஆசியக் கிண்ண இறுதிப் போட்டிக்கு, பாகிஸ்தான் அணி தயாராகி வரும் நிலையில், இளம் வீரர் சயிம் அயூப்பின் மோசமான ஃபார்ம் அணி நிர்வாகத்திற்குக் கவலையை ஏற்படுத்தியுள்ளது. இந்தியாவுக்கு எதிரான முக்கியப் போட்டியில் அவரை நீக்க வேண்டும் என்ற குரல்கள் எழுந்துள்ளன.
இந்தத் தொடரில் 6 போட்டிகளில் ஆடியுள்ள சயிம் அயூப், 4 முறை ‘டக் அவுட்’ ஆகியுள்ளதுடன், வெறும் 23 ஓட்டங்களை மாத்திரமே எடுத்துள்ளார். இருப்பினும், அவர் பந்துவீச்சில் சிறப்பாகச் செயல்பட்டு 8 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். அவரது சகலதுறை ஆட்டமே, அவரை அணியில் தக்கவைக்கக் காரணமாக இருக்கலாம் எனக் கூறப்படுகிறது.
ஒருவேளை அவர் நீக்கப்பட்டால், அவருக்குப் பதிலாக ஹசன் நவாஸ் அணியில் இடம்பெற வாய்ப்புள்ளது. மேலும், துடுப்பாட்ட வரிசையில் மொஹமட் ஹரிஸுக்கு பதவி உயர்வு வழங்கப்படலாம் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது. இருப்பினும், வங்கதேசத்தை வீழ்த்திய அதே அணியுடன் பாகிஸ்தான் களமிறங்கவே அதிக வாய்ப்புள்ளது.
