நாட்டிலுள்ள வீதிகளில் பொருத்தப்பட்டுள்ள CCTV கேமராக்கள் மூலம் போக்குவரத்து விதிமீறல்கள் கண்டறியப்பட்டுள்ளதாகக் கூறி, வாகன ஓட்டிகளை இலக்கு வைத்து முன்னெடுக்கப்பட்டு வரும் புதிய சைபர் மோசடி குறித்து இலங்கை கணினி அவசர தயார்நிலை குழு (Sri Lanka CERT) விசேட பொது எச்சரிக்கை ஒன்றை விடுத்துள்ளது.
முறைகேடான SMS மற்றும் WhatsApp குறுஞ்செய்திகள் மூலமாக இந்த மோசடி பரப்பப்பட்டு வருவதாக ஸ்ரீலங்கா CERT தெரிவித்துள்ளது.
இந்த செய்திகள் அனைத்தும் இலங்கை பொலிஸாரால் அனுப்பப்படும் உத்தியோகபூர்வ அறிவிப்புகள் போன்ற தோற்றத்தை ஏற்படுத்தி, பொதுமக்களின் தனிப்பட்ட மற்றும் நிதி விபரங்களை ஏமாற்றிப் பெற்றுக்கொள்ளும் நோக்கில் வடிவமைக்கப்பட்டுள்ளன.
போலி ‘GovPay’ இணையதளம்:
மோசடிக்காரர்கள் அனுப்பும் இந்தக் குறுஞ்செய்திகளில் உள்ள போலி லிங்குகள் (Links), அரசாங்கத்தின் உத்தியோகபூர்வ “GovPay” கட்டண தளத்தை ஒத்த ஒரு போலி இணையதளத்திற்குப் பொதுமக்களை வழிநடத்துகின்றன. அங்கு சென்று, குற்றம் சுமத்தப்பட்ட போக்குவரத்து விதிமீறல்களுக்கான அபராதங்களைச் செலுத்துமாறு வாகன ஓட்டிகள் அறிவுறுத்தப்படுகிறார்கள்.
இந்த போலி இணையதளங்கள் மூலம் பணம் செலுத்த முயற்சிப்பவர்கள், தங்களின் கிரெடிட்/டெபிட் கார்டு விபரங்கள், OTP குறியீடுகள், தேசிய அடையாள அட்டை (NIC) விபரங்கள் மற்றும் ஏனைய ரகசியத் தரவுகளை அறியாமலேயே சைபர் குற்றவாளிகளிடம் இழக்கும் பெரும் அபாயம் உள்ளதாக CERT எச்சரித்துள்ளது.
பொதுமக்களுக்கான பாதுகாப்பு வழிமுறைகள்:
இதனடிப்படையில், பொதுமக்கள் மிகுந்த அவதானத்துடன் செயற்படுமாறும், பின்வரும் பாதுகாப்பு வழிமுறைகளைப் பின்பற்றுமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்:
- SMS அல்லது WhatsApp மூலம் வரும் சந்தேகத்திற்கிடமான லிங்குகளைக் கிளிக் செய்வதைத் தவிர்க்கவும்.
- எந்தவொரு கட்டணத்தையும் செலுத்துவதற்கு முன்னதாக, அந்த இணையதளத்தின் நம்பகத்தன்மையை உறுதிப்படுத்தவும்.
- அடையாளம் தெரியாத அல்லது சந்தேகத்திற்கிடமான இணையதளங்களில் வங்கி அல்லது கார்டு விபரங்களை வழங்க வேண்டாம்.
- உங்களது ரகசிய OTP குறியீடுகளையோ அல்லது தனிப்பட்ட விபரங்களையோ யாருடனும் பகிர்ந்து கொள்ள வேண்டாம்.
- இத்தகைய மோசடி செய்திகள் அல்லது இணையதளங்கள் தென்பட்டால், உடனடியாக ஸ்ரீலங்கா CERT அல்லது இலங்கை பொலிஸாருக்கு அறிவிக்கவும்.
அதேநேரம், போக்குவரத்து விதிமீறல்களுக்கான அபராதங்களை “GovPay” அமைப்பின் மூலம் செலுத்துவதாக இருந்தால், பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவரால் முறையாக அபராதப் பத்திரம் (Fine Ticket) வழங்கப்பட்ட பின்னரே செலுத்த வேண்டும் என்றும், இத்தகைய குறுஞ்செய்திகளை நம்பி ஏமாற வேண்டாம் என்றும் ஸ்ரீலங்கா CERT பொதுமக்களைக் கேட்டுக்கொண்டுள்ளது
