Headlines

இஸ்ரேல் பொதுத்தேர்தல்: அரசியல் இருப்பு மற்றும் சிறைத்தண்டனைக்கு இடையேயான நெதன்யாகுவின் வாழ்வா-சாவா போராட்டம்

மத்திய கிழக்கில் ஈரான் மற்றும் பாலஸ்தீனம் மீது இஸ்ரேல் அண்மையில் நடத்திய தாக்குதல்கள் மற்றும் தற்போதும் தொடர்ந்து வரும் போர்ச் சூழல் உலக அரங்கில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. இந்த இக்கட்டான போர்ச் சூழலுக்கு நடுவே, இஸ்ரேலின் உள்நாட்டு அரசியலில் ஒரு முக்கிய திருப்பமாக நாடாளுமன்றத் தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது. வரும் அக்டோபர் 27-ஆம் தேதி இஸ்ரேல் நாடாளுமன்றத்திற்கு ஒரே கட்டமாகத் தேர்தல் நடைபெறும் என்று அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தத் தேர்தல் தற்போதைய பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவின் நீண்டகால அரசியல் பயணத்திற்கும், அவரது தனிப்பட்ட சுதந்திரத்திற்கும் ஒரு தீர்க்கமான சோதனையாக அமையவுள்ளது.

‘கினெசெட்’ மற்றும் தேர்தல் களம்

இஸ்ரேலின் நாடாளுமன்றம் ‘கினெசெட்’ (Knesset) என்று அழைக்கப்படுகிறது. மொத்தம் 120 இடங்களைக் கொண்ட இந்த நாடாளுமன்றத்திற்கு, விகிதாச்சாரப் பிரதிநிதித்துவ அடிப்படையில் தேர்தல் நடைபெறுகிறது. கடந்த 2023-ஆம் ஆண்டு அக்டோபரில் பாலஸ்தீனத்தின் ஹமாஸ் அமைப்பு நடத்திய தாக்குதல் மற்றும் அதன்பின் இஸ்ரேல் தொடங்கிய நீண்ட போர் ஆகியவற்றிற்குப் பிறகு நடக்கும் முதல் தேர்தல் இது என்பதால், சர்வதேச சமூகம் இதன் முடிவுகளை உற்று நோக்குகிறது.

நெதன்யாகுவின் சாதனை மற்றும் தற்போதைய சவால்கள்

இஸ்ரேல் அரசியல் வரலாற்றில் கடந்த 40 ஆண்டுகளில், மிக நீண்ட காலம் பிரதமராகப் பதவி வகித்தவர் என்ற பெருமை நெதன்யாகுவையே சாரும். பல அரசியல் நெருக்கடிகளுக்கு நடுவிலும் தனது ஆட்சியைத் தக்கவைத்துக் கொண்ட அவரது வியூகம் வியப்பளிப்பதாக இருந்தாலும், இந்த முறை சூழல் முற்றிலும் வேறாக உள்ளது.

நெதன்யாகு மீண்டும் பிரதமர் வேட்பாளராகப் போட்டியிடுகிறார். இருப்பினும், உள்நாட்டில் அவருக்கு எதிரான அதிருப்தி அலை மிகத் தீவிரமாக உள்ளது. குறிப்பாக, போரில் ஏற்பட்ட அதிகப்படியான உயிரிழப்புகள், ஹமாஸ் அமைப்பால் சிறைபிடிக்கப்பட்ட பணையக் கைதிகளை மீட்க முடியாத நிலை மற்றும் தீவிரவாத அமைப்புகளுக்கு எதிரான உத்திகளில் ஏற்பட்ட பின்னடைவுகள் ஆகியவை நெதன்யாகுவின் மீதான நம்பிக்கையை வெகுவாகக் குறைத்துள்ளன. அவருக்கு எதிராகப் முன்னாள் பாதுகாப்புப் படைத் தலைவர் காடி ஐசென்கோட் உள்ளிட்ட வலுவான தலைவர்கள் ஓரணியில் திரண்டு வருவது நெதன்யாகுவுக்குப் பெரும் சவாலாக உருவெடுத்துள்ளது.

சட்டப் போராட்டமும் அரசியல் எதிர்காலமும்

இந்தத் தேர்தல் நெதன்யாகுவுக்கு வெறும் அரசியல் அதிகாரத்திற்கான போட்டி மட்டுமல்ல, அது அவரது வாழ்வா-சாவா போராட்டமாகும். நெதன்யாகு மீது ஏற்கனவே ஊழல், மோசடி மற்றும் நம்பிக்கை துரோகம் உள்ளிட்ட பல குற்றச்சாட்டுகள் நிலுவையில் உள்ளன. இவற்றுடன், தற்போதைய போரில் நிகழ்ந்த மனித உரிமை மீறல்கள் காரணமாக அவர் மீது “போர்க் குற்றவாளி” என்ற பிம்பமும் சர்வதேச அளவில் கட்டமைக்கப்பட்டுள்ளது.

நெதன்யாகு பதவியில் இருக்கும் வரை அவருக்குக் கிடைக்கும் சட்டப் பாதுகாப்பு (Immunity), அவர் தேர்தலை இழந்தால் பறிபோகும் அபாயம் உள்ளது. ஒருவேளை இந்தத் தேர்தலில் நெதன்யாகு தோல்வியடைந்து, புதிய அரசு அமைந்தால், அவர் மீதான பழைய வழக்குகளின் விசாரணை தீவிரமடையும். குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்பட்டால், அவருக்குக் கடுமையான சிறைத்தண்டனை கிடைக்க வாய்ப்புள்ளது.

எனவே, வரும் அக்டோபர் 27 தேர்தல் முடிவுகள் இஸ்ரேலின் அடுத்த பிரதமர் யார் என்பதைத் தீர்மானிப்பது மட்டுமல்லாமல், பெஞ்சமின் நெதன்யாகுவின் எஞ்சிய வாழ்க்கை சிறையிலா அல்லது அதிகார மையத்திலா என்பதையும் தீர்மானிக்கப் போகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *