Headlines

சென்னை பெசன்ட் நகர் கடற்கரையில் உணர்வுபூர்வமாக நடைபெற்ற முள்ளிவாய்க்கால் 17ஆம் ஆண்டு நினைவேந்தல்

முள்ளிவாய்க்கால் தமிழினப் படுகொலையின் 17ஆம் ஆண்டு துயர நினைவுகளைச் சுமந்து, தமிழகத்தின் தலைநகரான சென்னையில் உணர்வுபூர்வமான நினைவேந்தல் நிகழ்வு முன்னெடுக்கப்பட்டுள்ளது.

மே-17 இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் தோழர் திருமுருகன் காந்தி அவர்களின் தலைமையில், சென்னை பெசன்ட் நகர் கடற்கரையில் நேற்று (17.05.2026) இந்த அஞ்சலி நிகழ்வு நடைபெற்றது. ஈழத் தமிழர்களின் நீதிக்கான போராட்டத்திற்கு வலுசேர்க்கும் வகையிலும், இறுதிப்போரில் படுகொலை செய்யப்பட்ட உறவுகளை நினைவுகூரும் வகையிலும் பெருந்திரளான மக்கள் இதில் பங்கேற்றனர்.

இந்த நினைவேந்தல் நிகழ்வில், சீர்காழி தொகுதி சட்டமன்ற உறுப்பினர் இரா. செந்தில்செல்வன் கலந்துகொண்டு மெழுகுவர்த்தி ஏந்தி தனது வீரவணக்கத்தைச் செலுத்தினார். அத்துடன், கடையநல்லூர் சட்டமன்ற உறுப்பினர் தி.மு. இராசேந்திரன், தமிழ்நாடு கொங்கு இளைஞர் பேரவைத் தலைவர் உ. தனியரசு, விடுதலைத் தமிழ்ப் புலிகள் இயக்கத்தின் குடந்தை அரசன் உள்ளிட்ட பல முக்கிய அரசியல் மற்றும் சமூக அமைப்புகளின் பிரதிநிதிகளும் பங்கேற்று அஞ்சலி செலுத்தினர்.

பல்வேறு அரசியல் கட்சிப் பிரமுகர்களும், சமூக இயக்கத் தோழர்களும், பொதுமக்களும் ஒன்றிணைந்து கண்ணீர் மல்க அஞ்சலி செலுத்திய இந்த நிகழ்வில், “தமிழினத்தின் பெருந்துயரத்தை ஒருபோதும் மறக்க மாட்டோம்; அவர்களுக்கான நீதியை வென்றெடுக்கும் பயணத்தில் என்றும் உறுதியுடன் இணைந்திருப்போம்” என்ற செய்தி ஒருமித்த குரலில் வலியுறுத்தப்பட்டது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *