சென்னை:
தமிழகச் சட்டமன்றத் தேர்தல் முடிவுகள் வெளியாகி ஒரு மாதம் கடந்த போதிலும், தமிழக அரசியல் களத்தில் ஏற்பட்டுள்ள சூறாவளி இன்னும் ஓய்ந்தபாடில்லை. ஆட்சியைத் தக்க வைக்கும் என அரசியல் விமர்சகர்களாலும், கருத்துக்கணிப்புகளாலும் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட திமுக, எதிர்பாராதத் தோல்வியைத் தழுவி எதிர்க்கட்சி நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளது. இந்தத் தோல்வி கொடுத்த அதிர்ச்சியை விட, தேர்தலுக்குப் பிந்தையக் கூட்டணி மாற்றங்கள் திமுகவை நிலைகுலையச் செய்துள்ளன.
சிதறுண்ட திமுக கூட்டணி; தவெகவுடன் கைகோர்த்த காங்கிரஸ்:
தேர்தல் களத்தில் திமுகவுடன் கைகோர்த்து நின்ற காங்கிரஸ், தேர்தல் முடிவுகளுக்குப் பிறகு ‘அதிகாரப் பகிர்வு’ என்ற ஒற்றைப் புள்ளியில் திமுக கூட்டணியிலிருந்து அதிரடியாக வெளியேறியது. யாரும் எதிர்பாராதத் திருப்பமாக, நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்துடன் (தவெக) கூட்டணி அமைத்து, அக்கட்சியின் அமைச்சரவையிலும் இடம்பெற்றுள்ளது.
பெரும்பான்மை இல்லா தவெக அரசு; உதவ முன்வந்த விசிக, ஐயூஎம்எல்:
நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலில் எந்தக் கட்சிக்கும் ஆட்சி அமைக்கத் தேவையான தனிப் பெரும்பான்மை கிடைக்கவில்லை. இந்தச் சூழலில், கூட்டணி கட்சிகளின் ஆதரவுடன் தவெக ஆட்சியமைத்துள்ளது. முதலமைச்சராக விஜயுடன் 9 பேர் முதலில் பதவியேற்றனர். நேற்று மேலும் 23 பேர் அமைச்சர்களாகப் பதவியேற்றனர்.
காங்கிரஸைத் தொடர்ந்து, திமுகவின் மற்ற இரு முக்கியக் கூட்டாளிகளான விடுதலைச் சிறுத்தைகள் கட்சி (விசிக) மற்றும் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் (ஐயூஎம்எல்) ஆகியவையும் தவெக அமைச்சரவையில் இணைய முடிவெடுத்துள்ளன. இதன்படி, இன்று இரு கட்சிகளின் பிரதிநிதிகளும் அமைச்சரவையில் இடம்பெறவுள்ளனர்.
திமுகவின் கோபம்; ஆ. ராசாவின் சர்ச்சையான விமர்சனம்:
தங்களது நீண்டகாலத் தோழமைக் கட்சிகள் தங்களைக் கைவிட்டு, புதிய கட்சியுடன் கைகோர்த்து ஆட்சிக் கட்டிலில் ஏறுவது திமுக தலைமைக்கு கடும் கொதிப்பை ஏற்படுத்தியுள்ளது. காங்கிரஸைத் தொடர்ந்து, விசிக மற்றும் ஐயூஎம்எல் கட்சிகள் மீதும் திமுக மூத்த தலைவர்கள் பகிரங்கமாக விமர்சனங்களை வைக்கத் தொடங்கியுள்ளனர்.
இந்நிலையில், திமுக துணைப்பொதுச்செயலாளரும், நீலகிரி எம்பியுமான ஆ. ராசா தன்னுடைய எக்ஸ் (X) பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவு, அரசியல் வட்டாரத்தில் பெரும் புயலைக் கிளப்பியுள்ளது. தனது முன்னாள் கூட்டாளிகளை (விசிக, ஐயூஎம்எல்) கடுமையான மற்றும் சர்ச்சைக்குரிய வார்த்தைகளால் அவர் சாடியுள்ளார்.
ஆ. ராசாவின் அந்தப் பதிவு இதோ:
“முன் ‘ஏற’ தரப்பட்ட ‘ஏணியும்’ மூட சாதியை நொறுக்க வேண்டிய ‘சிறுத்தையும்’ வெறும் ‘விசில்’ சத்தத்திற்கு முட்டுக் கொடுக்குமென்றால்; பூ முடித்தவனை புறந்தள்ளி – புணர்ச்சிக்கு வேறிடம் தேடுவதில் தவறில்லை! பெரியாரின் ‘காலதேச வர்த்தமான’ த்திற்கு காத்திருப்போம் ; என்றாலும் களமாடுவோம் ! வெற்றி நமக்கே!!”
வைரலாகும் பதிவு; வலுக்கும் எதிர்ப்பு:
ஆ. ராசாவின் இந்தப் பதிவு சமூகவலைதளங்களில் தீயாய் பரவி வருகிறது. திமுகவினர் இதை அதிகம் பகிர்ந்து தங்களது ஆதங்கத்தை வெளிப்படுத்தி வருகின்றனர். அதே நேரத்தில், ராசா பயன்படுத்தியுள்ள ‘புணர்ச்சி’ போன்ற வார்த்தைகள் கடுமையான விமர்சனத்திற்குள்ளாகியுள்ளது. முன்னாள் கூட்டாளிகளை நாகரீகமற்ற முறையில் விமர்சித்துள்ளதாகப் பலரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.
அதிகார வெறியின் உச்சம்: இயக்குநர் லெனின் பாரதி சாடல்:
திரைப்பட இயக்குநர் லெனின் பாரதி தன்னுடைய எக்ஸ் பக்கத்தில் ஆ. ராசாவின் பதிவிற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.
“அதிகாரம் இழந்த வெறியில் இன்னும் இன்னும் ஆழமாக தனது அசலான அதிகாரவெறி கொண்ட அருவருப்பான தன்மையை நன்றாக பாருங்களேன் என்று தன்னை தானே தோலுரித்து காட்டிக் கொண்டிருக்கிறது,”
என்று அவர் கூறியுள்ளார். மேலும், பெரியாரைப் பேசும் திமுகவின் மூத்த தலைவரின் நாக்கில் இருந்து வரும் இத்தகைய வார்த்தைகள் தான் சமூக நீதிக்கும், பெண்ணியத்திற்கும் திமுக கொடுக்கும் மரியாதையா? எனச் சமூகவலைதளங்களில் நெட்டிசன்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர்.
தமிழக அரசியலில் ஏற்பட்டுள்ள இந்தத் திடுக்கிடும் திருப்பங்கள் மற்றும் விமர்சன யுத்தங்கள், அரசியல் பரபரப்பைத் உச்சத்திற்கு கொண்டு சென்றுள்ளன.
