நாடாளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனா எதிர்வரும் 29ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். யாழ்ப்பாணத்திலுள்ள மல்லாகம் நீதவான் நீதிமன்றம் இந்த உத்தரவைப் பிறப்பித்துள்ளது.
குற்றவியல் அச்சுறுத்தல் விடுத்ததாகக் கூறப்படும் சம்பவம் தொடர்பான விசாரணையைத் தொடர்ந்து, யாழ்ப்பாணம் இளவாலை பொலிஸ் உத்தியோகத்தர்களால் அவர் கைது செய்யப்பட்டார்.
குற்றவியல் அச்சுறுத்தல் மற்றும் வாய்மொழி மிரட்டல் குற்றச்சாட்டுகளின் கீழ், துப்பாக்கிகள் கட்டளைச் சட்டத்தின் கீழ் நாடாளுமன்ற உறுப்பினர் கைது செய்யப்பட்டதாக பதிலூர்ப் பொலிஸ் ஊடகப் பேச்சாளர், பொலிஸ் அத்தியட்சகர் மினுர சேனாரத்ன தெரிவித்தார்.
பெண் ஒருவருக்கு துப்பாக்கியைக் காட்டி மிரட்டியதாகக் கூறப்படும் சம்பவம் தொடர்பில் வாக்குமூலம் அளிப்பதற்காக இராமநாதன் அர்ச்சுனா இன்று (27) காலை இளவாலை பொலிஸ் நிலையத்திற்கு வந்திருந்த போதே இந்த கைது இடம்பெற்றதாக பொலிஸார் தெரிவித்தனர்.
காணிப் பிரச்சினை தொடர்பான தகராறின் போது, நாடாளுமன்ற உறுப்பினர் பெண் ஒருவரை துப்பாக்கியால் அச்சுறுத்துவது போன்ற காணொளி சமூக ஊடகங்களில் பரவியிருந்தது.
இளவாலை பொலிஸ் நிலையத்தில் அந்தப் பெண் அளித்த முறைப்பாட்டின் அடிப்படையில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டு, நாடாளுமன்ற உறுப்பினர் கைது செய்யப்பட்டார்.
இதனைத் தொடர்ந்து அவர் மல்லாகம் நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தப்பட்ட போதே, அவரை எதிர்வரும் 29ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க நீதிமன்றம் உத்தரவிட்டது.
