2026 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில் மிகப்பெரிய திருப்புமுனையாக, திமுக கூட்டணியில் இருந்து விலகி நடிகர் விஜய்யின் தமிழக வெற்றி கழகத்திற்கு (தவெக) ஆதரவு அளிக்க காங்கிரஸ் கட்சி அதிகாரப்பூர்வமாக முடிவெடுத்துள்ளது. இதற்கான அறிவிப்பை டெல்லி காங்கிரஸ் மேலிடம் வெளியிட்டுள்ளது.
நடந்து முடிந்த தேர்தலில் விஜய்யின் தவெக 108 இடங்களில் வெற்றி பெற்றுள்ளது. இருப்பினும், ஆட்சி அமைப்பதற்கான பெரும்பான்மைக்குத் தேவையான 118 இடங்களை விட இது 10 இடங்கள் குறைவு என்பதால், மேஜிக் நம்பரை எட்டும் முயற்சியில் மற்ற கட்சிகளின் ஆதரவை தவெக நாடியது. இந்நிலையில், தேர்தலில் 5 இடங்களில் வெற்றி பெற்றுள்ள காங்கிரஸ் கட்சி, தவெக-விற்கு தனது ஆதரவை வழங்க முன்வந்துள்ளது.
தேர்தலுக்கு முன்பாகவே காங்கிரஸில் உள்ள பல தலைவர்கள் தவெகவுடன் கூட்டணி அமைக்கவே விரும்பியதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. மூத்த தலைவர்களின் அழுத்தம் காரணமாக திமுக கூட்டணியில் காங்கிரஸ் தொடர்ந்தாலும், தேர்தல் களத்தில் ராகுல் காந்தி மற்றும் மு.க.ஸ்டாலின் ஆகியோர் ஒரே மேடையில் பிரச்சாரம் செய்யாதது கூட்டணியில் இருந்த விரிசலை வெளிப்படுத்தியது. கே.சி. வேணுகோபால் இது குறித்த சூசகமான அறிவிப்பை வெளியிட்டிருந்த நிலையில், தற்போது கூட்டணி மாற்றம் உறுதியாகியுள்ளது.
கடந்த 2019 மக்களவை தேர்தல் முதல் தொடர் வெற்றிகளைக் கண்டு வந்த திமுக – காங்கிரஸ் கூட்டணி இதன் மூலம் முறிந்துள்ளது. மேலும், கூட்டணிக் கட்சிகளுக்கும் ஆட்சியில் பங்கு தரப்படும் என எதிர்பார்க்கப்படுவதால், தவெக தலைமையிலான புதிய அமைச்சரவையில் காங்கிரஸ் எம்எல்ஏக்களுக்கும் இடம் கிடைக்க அதிக வாய்ப்புள்ளதாக அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
