Headlines

பிடியும்.. பிணைப்பும்..: அரசியல் களம் காணாத ‘பாசப்பொழிவு’—உதயநிதியுடன் சீமான் ‘அன்புத்தம்பி’ என்று கைகுலுக்கல்!

—ஒரு திருமண விழா.. ஓராயிரம் அரசியல் யூகங்கள்—

சென்னை திருவேற்காட்டில், திமுக தலைமை நிலையச் செயலாளர் துறைமுகம் காஜாவின் இல்லத் திருமண விழா.. வழக்கமான அரசியல் பரபரப்புகள் ஒரு நிமிடம் ஸ்தம்பிக்க, அங்கே ஒரு அரிய பாசப்பொழிவு அரங்கேறியது.

எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் மற்றும் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான்—அரசியல் மேடைகளில் ஒருவரையொருவர் வசைபாடித் தீர்ப்பவர்கள். அவர்கள் இருவரும் ஒரே நேரத்தில் விழா அரங்கிற்குள் நுழைந்தபோது, அங்கிருந்தோரின் பார்வை முழுவதும் அவர்களின் மேலே நிலைத்தது. ஆனால், அரங்கேறியதோ எதிர்பாராத ஒரு அரிய காட்சி.

பரஸ்பரம் வணக்கம் கூறி கைகுலுக்கி நலம் விசாரித்துக் கொண்டனர். ஆனால், அத்தோடு முடியவில்லை.

நாற்காலியில் உட்காரப் போகும்போது, உதயநிதி சீமானின் கையை விடாமல், பாசத்துடன் பிடித்து அழைத்துச் சென்று, தனது அருகிலேயே உட்கார வைத்தார். ஒரு நிமிடம் அரசியல் களம் கண்டிராத பாசம் தெறிக்க, இருவரும் சாதாரணமாகப் பேசிக் கொண்டிருந்தனர். உதயநிதி, எஸ்டிபிஐ கட்சித் தலைவர் நெல்லை முபாரக்கையும் இதேபோல கையைப் பிடித்து அழைத்து வந்து அருகே அமர வைத்தார். இந்தத் திருமண விழாவில் கைகுலுக்கல் மட்டுமல்ல, உதயநிதிPersonal ஆக சீமானைக் கையைப் பிடித்து அழைத்துச் சென்று அமர வைத்த அந்த ஒரு செயல் காண்போரையும் நெகிழச் செய்தது.

இது ஒரு கட்சி அரசியலைக் கடந்த குடும்ப நிகழ்வு என்பதைத் தன் பேச்சில் சீமான் உறுதிப்படுத்தினார். துறைமுகம் காஜா, சீமானைக் கட்டி அணைத்து, “என் அண்ணன் மகளை ஏன் அழைத்து வரவில்லை?” என்று கேட்ட பாசப் பிணைப்பில் அந்த குடும்பத்தின் ஒரு அங்கமாக சீமான் தன்னை உணர்வதை நெகிழ்ச்சியுடன் பகிர்ந்து கொண்டார்.

சீமானின் பாசப்பிணைப்பு பேச்சு:

சீமான் தனது வாழ்த்துப் பேச்சில், மேடையில் இருந்த டி.கே.எஸ். இளங்கோவன், ஆர்.எஸ். பாரதி, எம்.ஆர். பன்னீர்செல்வம், ராஜ கண்ணப்பன், ஆவடி நாசர் என திமுகவின் மூத்த தலைவர்களை மரியாதை நிமித்தமாகப் போற்றி வணக்கம் செலுத்தினார். அதன் பிறகு அவர் சொன்ன அந்த ஒரு வரி அங்கிருந்த அனைவரையும் நெகிழ வைத்தது.

“என்னுடைய அன்புத் தம்பி, எதிர்கட்சித் தலைவர் உதயநிதி…”

அவர் இதைச் சொன்னதும், அரங்கம் முழுவதும் கரகோஷம் எழுந்தது. அரசியலைக் கடந்து அவர்கள் இருவரும் பாசப் பிணைப்புடன் இருப்பது, காண்போரையும் மிரள வைத்தது. அம்பாசமுத்திரத்தில் சீமான் பொது வேட்பாளராக நிறுத்தப்படுகிறார் என்ற யூகங்கள் ஒருபுறம் இருக்க, உதயநிதி- சீமான் இடையே ஏற்பட்டுள்ள இந்த இணக்கமான சூழல், ராஜதந்திர ரீதியாகவும் கவனிக்கத்தக்கது.

பேச்சின் நிறைவாக சீமான், வள்ளுவர் தந்த மறைமொழிக்கேற்ப, ‘அன்பும் அறனும் உடைத்தாயின் இல்வாழ்க்கை பண்பும் பயனும் அது’ என்ற குறள்வழி மணமக்கள் வாழ வேண்டும் என வாழ்த்தி, இஸ்லாமிய மறைமொழிகளான நபிகள் நாயகம் மற்றும் அல்லாஹ்வின் துவாவுடன் தன் உரையை நிறைவு செய்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *